ஜனாதிபதி தேர்தலை பிற்போடவே முடியாது – தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள்

ஜனாதிபதி தேர்தலை பிற்போட முடியாதென தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகளான நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் மற்றும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் ஆகியன தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலா, பாராளுமன்றத் தேர்தலா முதலில் நடைபெறும் என்பது தொடர்பில் குழப்பமான நிலைமைகள் நீடிக்கின்ற நிலையில், பாராளுமன்ற தேர்தல் முறைமை மாற்றமும் அமைச்சரவையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் தேர்தல் கண்காணிப்பு அமைப் புகள் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தன. அந்த அமைப்புகள் மேலும் தெரிவித்தவை வருமாறு,

“தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவிக்கையில்,

“இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலும் அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலும் நடைபெறவிருக்கின்ற தருணத்தில் தான் எமது ஆட்சியாளர்களுக்கு தேர்தல் முறைமை மாற்றம் சம்பந்தமான சிந்தனைகள் வருகின்றன. இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலையும் அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலையும் அரசமைப்புக்கு அமைவாக முன்னெடுக்க வேண்டும்.

தற்போது தேர்தல் முறைமை மாற்றம் என்பது அமைச்சரவையை பயன்படுத்தி நிறைவேற்று அதிகாரமுறையவர் தமது அதிகாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். பாராளுமன்றத்தை இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் கலைக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு கிடைக்கிறது. அதனடிப்படையில் தற்போதைய சூழலில் அவரால் எந்த நேரத்திலும் அவரால் பாராளுமன்றத்தினை கலைக்க முடியும். அவ்வாறு இல்லையேல் 2025 வரையில் கொண்டுசெல்லவும் முடியும்.

ஆனால், ஜனாதிபதி தேர்தல் அரசமைப்பின் பிரகாரம், செப்ரெம்பர் 17இல் இருந்து ஒக்ரோபர் 17க்குள் நடத்த வேண்டியுள்ளது. இருப்பினும் தற்போதைய ஆட்சியாளர்கள் எப்படியாவது அதனை நடத்தாது இருப்பதற்கு முயற்சிக்கின்றார்கள். மறுபக்கத்தில் அரசியல் கட்சிகள் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரங்களை ஆரம்பித்தும் உள்ளன. எவ்வாறாயினும், அரசாங்கத்தால் அரசமைப்பை மீறி தேர்தலை பிற்போட முடியாத நிலைமைகள் உள்ளது. ஆகவே, ஜனாதிபதி தேர்தல் எந்த காரணத்துக்காகவும் நடத்தாது கைவிட முடியாது” என்றார்.

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவிக்கையில், உள்ளுராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்கு இரண்டரை வருடங்கள் சென்றிருக்கின்றன. ஐந்து வருடங்களாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதன் ஊடாக தேர்தல் முறைமையை மாற்றியமைக்க முடியும்.

எல்லை நிர்ணயம் தொடர்பான முடிவுகளுக்கு அரசியல் கட்சிகளால் இணக்கம் தெரிவிக்க முடியாத நிலைமைகளும் ஏற்படும். இவ்வாறான நிலையில் பாராளுமன்ற தேர்தல் முறைமையை மாற்றி அமைப்பதற்கான எல்லை நிர்ணயம் பூர்த்தி செய்யப்படாவிட்டால் பாராளுமன்ற தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்படும். அவ்வாறில்லையாயின், சுயாதீனமாக பாராளுமன்றத் தேர்தலை பிற்போடும் முயற்சியாகவும் அமையலாம்.

எனினும், அரசமைப்புக்கு அமைவாக இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்தியேயாக வேண்டும். அதனை பிற்போடுவதற்கு எந்தவிதமான காரணங்களையும் கூற முடியாது. ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கான வழிகள்
எவையும் இல்லை” என்றார்.