இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இன்று: நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை ஜனாதிபதி தேர்தல் - தமிழ்வின்

இலங்கையில் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது  ஜனாதிபதியை தெரிவு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் இன்று சனிக்கிழமை (21)  இடம்பெறவுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க, தமிழ்ப் பொது வேட்பாளர் உட்பட38 பேர் களத்தில் உள்ளனர். தேர்தல்முடிவு நாளை வெளியாகிறது.

இலங்கையில் கடந்த 2019-ல்பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சிமுறைக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து,  தனது ஜனாதிபதி  பதவியை கோட்டாபய ராஜபக்ச இராஜினாமா செய்தார். 2022 ஜூலை 22-ம் திகதி  நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டார்.

அவரது பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், இன்று புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறுகின்றது.

17, 140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். சுதந்திரமானதும், நீதியானதுமான வகையில் தேர்தலை நடத்த ஒத்துழைக்க வேண்டும் என  சகல பிரஜைகளிடமும்  தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

நாடளாவிய ரீதியில்  13421  வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில், சுமார் 63 ஆயிரம் காவல்துறையினர்  பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். முப்படையினரும் பாதுகாப்பு நிமித்தம் தயார் நிலையில் உள்ளனர். தேர்தல் பணிகளுக்காக 2 இலட்சத்து 25 ஆயிரம் அரச உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

22 தேர்தல் மாவட்டங்களில்  கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் மாத்திரம் 3151 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கெடுப்பு இன்று சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது. வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இத்தேர்தலில் களத்தில் உள்ள 38 வேட்பாளர்களில்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச, தேசிய மக்கள் சக்திதலைவர் அநுர குமார திசாநாயக்கஇடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில்,ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தாலும், சுயேச்சையாக களமிறங்கி உள்ளார். அவருக்கு பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த சிலரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி முன்னணி சார்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார். அவருக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி. மலையக மக்கள் முன்னணி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க, பல்வேறு கட்சிகள் அடங்கிய தேசிய மக்கள்சக்தி முன்னணி சார்பில் போட்டியிடுகிறார். இவருக்கு இடதுசாரி அமைப்புகளின் ஆதரவு உள்ளது. மகிந்த ராஜபக்சவின் மகன் நமல்ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. அரியநேத்திரன், தமிழ் பொது கூட்டமைப்பு என்ற பெயரில்,  தமிழ் அமைப்புகளின் சார்பில் தமிழர்களுக்கான பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.  அவருக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் மெரும் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தலை நாடு முழுவதும் முன்னிட்டு  பாது­காப்பு படை­யினர் மற்றும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.