வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருந்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அந்தக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசு கட்சியுடனான சந்திப்பு தொடர்பில் தமது சமூக ஊடகப் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன் போது ஆராயப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருந்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அதற்காக அனைவரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தான் சுட்டிக்காட்டியதாக அவர் கூறியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக பிரதேச மட்டத்தில் எதிர்கொள்ளும் மீன்படி மற்றும் காணி பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் அபிவிருத்தி தேவைகள் தொடர்பில் பிரதிநிதிகள் முன்வைத்த சில பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் இனவாதத்தை உருவாக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் தாம் சுட்டிக்காட்டியதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.



