வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாடாக  இலங்கை மாறி வருவதாக ஜனாதிபதி கருத்து

இலங்கை இன்று ஒரு வலுவான பொருளாதார அடித்தளத்தைக் கொண்ட நாடாக  மாறி வருகிறது.  2025 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும், சட்டத்தின் ஆட்சியிலும் குறிப்பிடத்தக்க திருப்புமுனையைக் குறிக்கும் ஆண்டாகும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க  தெரிவித்தார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகளை புதன்கிழமை (17)  முற்பகல் ஆரம்பித்து  வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,

ஒரு நாடு பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு தசாப்த காலத்தை இழக்கிறது. ஆனால் தற்போதைய அரசாங்கம்  அந்த தசாப்தத்தின் பாதி அல்லது அதற்கும் குறைவான காலத்திற்குள் இந்த நிலைமையை மாற்ற உறுதிபூண்டுள்ளது.  இன்று ஆரம்பிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் ஒரு தனித்துவமான சந்தர்ப்பம். ஒரு நாள் கூட தாமதிக்காமல், உரிய  நேரத்தில் பணிகளை நிறைவு செய்து ஒப்படைக்குமாறு  அனைவரையும் வலியுறுத்துகிறேன்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மட்டும் மட்டுப்படுத்த முடியாது.  நாட்டில் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை உருவாக்க அரசாங்கம்  பல கோணங்களில்  செயல்பட்டு வருகிறோம். சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துதல் மற்றும் அனைவரையும் சட்டத்தின் கீழ் கொண்டு வருதல், ஆயுத பயன்பாட்டுடனான குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுதல், அரசியல் அதிகாரத்திற்குள் பரவலாக உள்ள இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல், அத்துடன்  நவீன அரச சேவையை கட்டியெழுப்ப தேவையான சம்பள உயர்வு மற்றும்   வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டில் ஒரு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை நாங்கள் அறிவோம். இதன் விளைவாக, முழு பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் வீழ்ச்சியடைந்தது.

அத்தகைய பொருளாதார வீழ்ச்சிக்குப் பிறகு, ஒரு நாடு  ஒரு தசாப்த காலத்தை இழக்கிறது. ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலத்தில், ஒருவேளை பாதி காலத்திற்குள் அதை மாற்ற எங்கள் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. இந்த பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் 2025  வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டது.

இழந்த தசாப்தம் ஒரு நீண்டகால நெருக்கடியை உருவாக்குகிறது. இந்த நெடுஞ்சாலைப் பகுதியை அதற்கு ஒரு உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்தப் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட நெருக்கடியின் அளவு மற்றும் திசையினை  இது போன்ற திட்டங்களிலிருந்து அடையாளம் காணலாம். கடந்த ஜனவரி மாதம் நான் சீனாவுக்கு விஜயம் செய்தபோது, சீன உதவியின் கீழ் நமது நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு

ஆதரவளிக்குமாறு சீன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தேன். அவர் அதில் விசேட  கவனம் செலுத்தி, அந்தத் திட்டங்கள் அனைத்தையும் மீண்டும் தொடங்குவதற்குத் தேவையான ஆதரவை வழங்க ஒப்புக்கொண்டார். அதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.

இந்த நெடுஞ்சாலைப் பகுதிக்கு ஒரு விசேட சலுகை கடன் திட்டத்தை வழங்குமாறு  நாங்கள் கோரினோம். அதற்கமைய டொலர் அடிப்படையில் விசேட  கடன் திட்டங்கள் எதுவும் இல்லாததால், அந்தக் கடன் திட்டத்தை யுவானில் வழங்க முடியும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சீன எக்ஸிம் வங்கி 2.5 – 3.5 சதவீத வட்டி விகிதத்தில் இந்தக் கடனை எங்களுக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளது. அதற்காக நாங்கள் எங்கள் விசேட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதை நாம் கவனமாக  ஆராய வேண்டும். பொருளாதாரத்தை புத்துயிர் பெறுவது பற்றி ஆராயும் போது, இந்த நெருக்கடி எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். 2022-2023 பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட சமூக அவலம்  தற்செயலாக உருவாக்கப்படவில்லை. அதனுடன் தொடர்புடைய பல முக்கிய காரணிகளும் சிக்கல்களும் உள்ளன.

எங்கள் தலைமுறை அந்த பொருளாதார சரிவை அனுபவித்தது. மக்கள் வரிசையில் நின்று இறப்பதையும், சமூகக் கட்டமைப்பின் சரிவையும் நாங்கள் அனுபவித்திருக்கிறோம். அந்த சமூக அவலத்தின் சொந்தக்காரர்களாகிவிட்டோம். இலங்கையில் மீண்டும் இதுபோன்ற நெருக்கடி ஏற்படாதவாறு இந்த நாட்டைக் கட்டியெழுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

அதற்காக உட்கட்டமைப்பு அபிவிருத்தி மட்டும்  போதுமானதல்ல. கடந்த காலத்தில், உட்கட்டமைப்பு அபிவிருத்தி  மட்டுமே பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உட்கட்டமைப்பு என்பது ஒரு பொருளாதாரத்தையும் சமூகத்தையும் நிலைப்படுத்துவதற்கான ஒரு அங்கம்  மட்டுமே. இருப்பினும், அந்த அங்கம் மட்டுமே இருந்தால், அது அங்கவீன நிலைமையாகும். எனவே, நமது நாட்டில்  அங்கவீனமான அபிவிருத்தி மூலோபாயமே இருந்தது.

நிர்மாணத்துறைகளினால் மட்டுமே ஒரு நாட்டில் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மை உருவாகாது. அதற்கு, பல பரிமாணங்களில் உள்ள விடயங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். எனவே, நமது அரசாங்கம் இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை பல்வேறு பரிமாணங்களில் உருவாக்குகிறது. உட்கட்டமைப்பு அதன் ஒரு பகுதியாகும். இது போன்ற பல முக்கியமான பணிகள் உள்ளன. அதன்போது, சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்தை நாங்கள்

நிலைநிறுத்துகிறோம். ஒரு நிலையான அரசை உருவாக்க, அனைவரும் சட்டத்தின் ஆட்சிக்கு அடிபணிய வேண்டும். அரசியல் கலாசாரத்தின் அழிவு காரணமாக, நமது நாடு ஆயுதமேந்திய குற்றக் கும்பல்களுக்கு பலியாகியுள்ளது. அவர்கள் இந்த நாட்டில் ஒரு பாதாள அரசை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கு அரசியல் அதிகாரத்தினதும், பொலிஸாரினதும் பாதுகாப்புக் கிடைத்தது.

இருப்பினும், இந்த பாதாள அரசை நாம் நிச்சயமாக முடிவுக்குக் கொண்டு வருவோம். அவ்வாறின்றி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புடன் கூடிய ஒரு அரசை, எதிர்கால பிள்ளைகளுக்கு உருவாக்க முடியாது. தற்போது நாம் கைது செய்துள்ள குழு, நம் நாட்டில் நடைபெறும் போதைப்பொருள் வர்த்தகத்தில் சுமார் 50% க்கு பொறுப்பானவர்கள்.

அவர்கள் கிட்டத்தட்ட 75% ஆயுதமேந்திய குற்றக் கும்பல்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் நம் நாட்டின் அரசியல் அதிகாரத்திற்கு பல்வேறு வழிகளில் பணத்தை வழங்கியுள்ளனர். இந்த ஆயுதமேந்திய குற்றக் கும்பல்களை ஒடுக்க நாங்கள் செயற்பட்டு வருகிறோம்.

மேலும், அரசியல் அதிகாரம் முழுவதும் பரவியுள்ள இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி ஆகியவை அபிவிருத்திக்கு பெரும் தடையாக உள்ளன. இது சமூக உறுதியற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. ஆனால், பொதுமக்களின் பணத்தில் ஒரு ரூபா கூடத் திருடாத, வீணாக்காத ஒரு அரசியல் அதிகாரத்தை இப்போது நாம் உருவாக்கியுள்ளோம்.

சில இடங்களில் இன்னும் பழைய பழக்கவழக்கங்களில் உள்ள அரச பொறிமுறை மற்றும் தனிநபர்களையும் நாம் அடையாளம் கண்டுள்ளோம். அவர்களுக்கு புதிய அரசியல் கலாசாரத்திற்கு ஏற்ப தங்களை மாற்றியமைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் நாம் கூறுகிறோம். அவர்களால் முடியாவிட்டால், அவர்கள் வெளியேறலாம். அல்லது நாங்கள் அவர்களை வெளியேற்றுவோம். பொதுமக்களின் ஒவ்வொரு ரூபாயையும் பொதுச்சொத்தாக மதித்து அதனைப் பாதுகாக்கும் அரச சேவை நமக்குத் தேவை.

அதற்காக, அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட வசதிகளை நாம் வழங்கி வருகிறோம். எமது வரவு செலவுத் திட்டத்தில மிகப் பாரிய பகுதியை அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வுக்காக ஒதுக்குகிறோம். 2026 ஆம் ஆண்டில் மட்டும் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்குவதற்காக 110 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டளவில், இந்த சம்பள உயர்வை செலுத்துவதற்காக மாத்திரம் 330

பில்லியன் ரூபாய்கள் செலவாகின்றது. இவ்வாறு, அரச சேவையை நவீனமயமாக்க நாம் அரப்பணிப்புடன் செயற்படுகின்றோம். இன்று, நாம் ஒவ்வொரு துறையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். நாம் வரவு செலவுத் திட்ட ஆவணத்தில் எதிர்பார்க்கப்படும் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை விட குறைவான வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை இலங்கையில் முதன்முறையாக இந்த வருடம், கண்டுகொள்ள முடியும். இலங்கையில் வருமான இலக்குகள் ஒருபோதும் எட்டப்படவில்லை.

வரவு செலவுத் திட்டத்திற்குப் பிறகு ஆண்டு முழுவதும் பல்வேறு குறைநிரப்பு பிரேரணகள் மூலம் பணத்தை மீண்டும் மீண்டும் ஒதுக்கும் கலாசாரம் இருந்தது. நாம் அவை அனைத்தையும் மாற்றியுள்ளோம். இவ்வாறு ஒரு திட்டத்துடன் பொருளாதார இலக்குகளை முறையாக செயற்படுத்தி வருகிறோம். அதன்படி, தொடர்ச்சியாக  சுமார் 5% அளவில் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைவதில் இரண்டு ஆண்டுகளை நெருங்கி வருகிறோம்.

இன்று, நாம் டொலரின் பெறுமதியை குறிப்பிடத்தக்க அளவில் நிலைப்படுத்தியுள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் டொலர் கையிருப்புக்களை 7 பில்லியன்கள் வரை அதிகரிக்கும் இலக்கை நோக்கி நாம் செயல்பட்டு வருகிறோம். வங்கி வட்டி விகிதங்களை ஒற்றை இலக்கத்தில் பேண முடிந்துள்ளது. இன்று, வங்கிக் கட்டமைப்பு தனியார் முதலீட்டிற்கு அதிக அளவில் பணத்தை செலுத்தத் தொடங்கியுள்ளது.

மேலும், அரசாங்கத்தின் முதல் ஆண்டில் ஒரு பில்லியன் டொலர் நேரடி முதலீட்டை ஈர்க்க முடிந்தது. துறைமுக நகரில் 1.4 பில்லியன் டொலர் மதிப்புள்ள 04 திட்டங்களுக்கு நாங்கள் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளோம். மேலும் 1.2 பில்லியன் டொலர் மதிப்புள்ள மற்றொரு பாரிய திட்டத்திற்கு 90% வீதம் இணக்கப்பாடு அளிக்கப்பட்டுள்ளதுடன்,  ஜப்பான் விஜயத்தின் போது அந்த திட்டத்தை நிறைவு செய்தல் குறித்த இலக்கை அடைந்துகொள்ளும் நோக்கத்துடன் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். இந்த ஆண்டு சுற்றுலாத் துறை, ஏற்றுமதி வருமானம் மற்றும் வெளிநாட்டு வருமானம் ஆகியவற்றில் மிக உயர்ந்த வளர்ச்சியைக் கொண்ட ஆண்டாகவும் இருக்கும்.

இவ்வாறு,  வீழ்ச்சி அடைந்த ஒரு அரசு,  நிலையான அடித்தளத்துடன் கூடிய பொருளாதாரமாக கட்டியெழுப்பப்படுகிறது. எனவே, இந்த ஆண்டு இலங்கை வரலாற்றில் பொருளாதாரம், சமூக வாழ்க்கை, அரசியல் கலாசாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகிய அனைத்தும் மிக முக்கியமான திருப்புமுனையை அடைந்த ஆண்டாக மாறியுள்ளது.

அதன்போது, வீதிக் கட்டமைப்பு  மிகவும் முக்கியமானது. பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னால் இருந்த ஊழல் காரணமாக, அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதியின் பணிகள் தடைப்பட்டன. நாம் இவை அனைத்தையும் நிறைவு செய்கிறோம். மேலும், மக்களுக்குத் தேவையான குடிநீர் வழங்கப்பட வேண்டும்.

மக்களுக்குத் தேவையான சேவைகளை செயற்திறனுடன் வழங்க வேண்டும். மேலும், மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இந்தப் பயணத்தில் நாங்கள் மிகவும் சீராக முன்னேறி வருகிறோம். வெளியே உள்ள அரசியல் குழப்பங்கள் எங்களுக்கு முக்கியமில்லை.

சீரழிந்த அரசியல் கலாச்சாரத்திற்கு பதிலாக, சீரான அரசியல் கலாசாரத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம். முன்னேற்றத்தை நோக்கி நகரும் பாதையில், அரசியல் அதிகாரம் மற்றும் பிரஜை இருவரினதும் முன்னேற்றம் மிகவும் முக்கியமானது. எனவே, உலகில்  முன்னேறிய நாடாகவும்,   உலகில் அபிவிருத்தியடைந்த நாடாகவும், இலங்கையை கட்டியெழுப்பும் சவாலை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

இந்த திட்டத்தை வெற்றிகரமாக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்ட  அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஒரு அரசாங்கமாக,  உங்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து ஆதரவையும் வழங்குவேன்.  ஒரு நாள் கூட தாமதிக்காமல் இந்த திட்டத்தை முடித்து தேசத்திற்கு வழங்குவதற்கு உங்கள் அனைவரையும் பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.