கோட்டாபய நாடு திரும்புவதற்கு இது சரியான நேரமல்ல- ரணில்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான நேரம் அல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதர நெருக்கடி ஏற்பட்டதையடுத்து மக்களின் எதிர்ப்பின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய , தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ளார்.

அவர் மீண்டும் நாட்டுக்கே திரும்பி வரவுள்ளதாக தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றது.

இதையடுத்து,தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு அளித்த பேட்டியில்,

“கோட்டாபயவை வெளியேற்றுவதற்காக அணிதிரண்ட பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் மத்தியில் அரசியல் பதட்டத்தை இது தூண்டக்கூடும்.

நிர்வாகம் மற்றும் பிற அரசாங்க அலுவல்களை கையாள்வதற்காக கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றேன்.

இருப்பினும் விரைவில் இலங்கைக்கு திரும்ப திட்டமிட்டுள்ளதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவிக்கவில்லை.

நாங்கள் ஏற்கனவே கீழே வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன். சுரங்கப்பாதையின் முடிவில் நான் ஒளியைக் காண்கிறேன்; நாம் எவ்வளவு விரைவாக அதை அடைய முடியும் என்று பார்க்கின்றோம்.

பணவீக்கம் மற்றும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் பெரும்பாலான இலங்கையர்களின் பொருளாதார நிலைமைகள் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் காண பல மாதங்கள் ஆகும்.

நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை தற்போது அனுபவித்துள்ளது .அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பது, சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் தங்கியுள்ளது .

கடந்த மாதம் தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பயண அனுமதி இம்மாதம் 11ஆம் திகதியுடன் காலாவதியாகின்றமை குறிப்பிடத்தக்கது.