அனர்த்தத்திற்குப் பிறகு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயற்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று (06) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை பயிரிடுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற நிலங்களை விரைவாகக் கண்டறிந்து அவற்றுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும், நீர்ப்பாசனத் திணைக்களம், மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
பயிர்ச்செய்கையில் ஈடுபட முடியுமான விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் பயிரிடக்கூடிய விவசாய நிலங்களின் அளவை உடனடியாகக் கண்டறிந்து, அவர்களுக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள இழப்பீட்டை உடனடியாக வழங்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், கண்டி மாவட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்துவதற்கு பாடசாலைகளை மீண்டும் திறப்பதில் உள்ள கால இடைவெளியைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டினார்.
மக்களை மீளக் குடியேற்றுவதற்காக அருகிலுள்ள அரச காணிகளை அடையாளம் கண்டு சமர்ப்பிக்குமாறும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடி அந்தக் காணிகளை விடுவிப்பதற்குத் தேவையான தலையீடு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மக்களை மிகவும் பாதுகாப்பாக மீளக்குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், முற்றாக அழிக்கப்பட்ட மற்றும் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு அந்த நோக்கங்களுக்காக முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
வெள்ளம், சூறாவளி, மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்ளைத் தடுக்க முடியாவிட்டாலும், உயிர்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படும் சேதங்களைத் தடுக்க முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, மத்திய மலைநாட்டைப் பற்றிய முறையான ஆய்வு நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டு வரும் மத்திய மலைநாட்டை மீட்டெடுக்க நீண்டகால வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



