ஜனாதிபதி அநுர மற்றும் பிரதமர் மோடி இன்று சந்திப்பு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஆரம்பம்

WhatsApp Image 2024 12 15 at 21.59.19 8cbc2dac ஜனாதிபதி அநுர மற்றும் பிரதமர் மோடி இன்று சந்திப்பு

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை  மேற்கொண்டு நேற்று (15)   இந்தியா சென்றதுடன், புதுடில்லி வந்தடைந்த ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இந்த பயணத்தை ஒட்டி நகரின் பல பகுதிகளில் அனுரகுமார மற்றும் பிரதமர் மோடி அவர்களின் புகைப்படம் தாங்கிய பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன.

ஜனாதிபதி அநுரவை வரவேற்க தயார் நிலையில் புது டில்லி

இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன், வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவல் ஆகியோரை சந்தித்தார்.

இதன் போது இலங்கையுடனான நட்புறவை என்றும் பேணுவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தங்கியுள்ள டில்லியில் உள்ள ITC மௌரியா ஹோட்டலில் இந்த சந்திப்புகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,  ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில், பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியில் பல முக்கிய விடயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட உள்ளன.

அத்துடன், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (16) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய பயணம் தொடர்பில் சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளன.

டெல்லிபயணத்தையடுத்து ஜனவரியில்  ஜனாதிபதி அநுர பெய்ஜிங் செல்கிறார். இந்தியாவுடன் நெருக்கமாக செயற்பட்டாலும் சீனாவுடனான நட்புறவிலும் மாற்றம் வராது என்ற செய்தி இதன்மூலம் சொல்லப்படுகின்றது.

இலங்கை ஜனாதிபதி அநுரவின் இந்த பயணம் தொடர்பில் பிபிசிக்கு கருத்து தெரிவித்துள்ள பத்திரிகையாளர் ஆர்.சனத் , இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கூடுதல் கவனம் செலுத்திவரும் நிலையில், அந்த தரப்புகள் பக்கம் இலங்கை முழுமையாக சாய்வதை தடுப்பதற்குரிய தேவைப்பாடு சீனாவுக்கு உள்ளது.” என   சுட்டிக்காட்டினார்.