ஜனாதிபதி அநுரகுமார நாளை யாழ்ப்பாணம் பயணம்!

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை மற்றும் நாளை மறுநாள் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டும், பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காகவும் இந்த விஜயம் அமையவுள்ளது.

அதன்படி நாளை பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணம் வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் பிரதான தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.

இதனை தொடர்ந்து யாழ்ப்பாண சுற்றுலா சபையினால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தைப்பொங்கல் நிகழ்விலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

அத்துடன் நாளை மறுதினம் ‘தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 31,218 வீடுகளை அமைக்கும் பணியின் ஒரு கட்டமாக, வடக்கு மற்றும் கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட 2,500 குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்த நிகழ்வு காலை 9 மணிக்கு சாவகச்சேரி வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அதேநேரம் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் வட மாகாண நிகழ்ச்சித் திட்டம், அன்று பிற்பகல் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு வடக்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.