அரசாங்கத்தின் குறை நிரப்புப் பிரேரணை பாராளுமன்றில் முன்வைப்பு

அனர்த்த நிவாரணங்களுக்காகவும், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்பாட்டுக்காகவும், 500 பில்லியன் ரூபா குறை நிரப்பு மதிப்பீட்டு தொகை முன்வைக்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்றிக் கொள்வதற்காக எதிர்வரும் 18ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் விசேட பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
அனர்த்தத்தின் பின்னர் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் செலவிடுவதற்காக 72.2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.

அவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதியே தற்போது செலவிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டிலும் இந்த அனர்த்த நிவாரணங்களுக்காகவும், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்பாட்டுக்காகவும், புதிய வீடுகளை அமைப்பதற்காகவும் மேலதிகமாக 500 பில்லியன் ரூபா குறை நிரப்பு மதிப்பீட்டு தொகை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, 18ஆம் திகதி இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, விவாதித்து 19ஆம் திகதி மாலை வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

அனர்த்த நிலைமைகளில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவே இவ்வாறு விசேட பாராளுமன்ற அமர்வினை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.