சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த ஆவணம்  பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த ஆவணத்தை சற்று முன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அதிக வட்டிக்கு கடன் பெறுவதாக சிலரால் அரசியல் நோக்கத்துடன் ஏமாற்றும் போலி தகவல்கள் வெளியிடப்படுகின்றன என ஜனாதிபதி தெரிவித்தார்.

நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் மூலம்  சர்வதேசத்தின் மத்தியில் நாடு மேலும் உயர்வடையுமே தவிர வீழ்ச்சியடையாது என்றார் ஜனாதிபதி.

மேலும் “ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தம் ஊடாக நாட்டை அராஜக நிலைக்கு கொண்டுசெல்ல எண்ணியவர்களின் முயற்சிக்கு மக்கள் ஒத்துழைக்கவில்லை. 2026 இல் உற்பத்தி பொருளாதாரத்தின் ஊடான வருமானத்தை 15 சதவீதமாக உயர்த்துவதே எமது இலக்கு.

எரிபொருள் விலை குறித்த தீர்மானங்களை எடுப்பதில் அரசியல்வாதிகளின் தலையீடு முற்றாக நீக்கப்படும்.  நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு தொடர்பில் ஏப்ரல் 3ஆம் வாரத்தில் விவாதத்திற்கான நேரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் , ஓய்வூதியம் தீர்மானிக்கப்படும். 2018 இல் அறிமுகப்படுத்தப்பட்ட விலை சூத்திரத்தின் அடிப்படையில் மாத்திரமே எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படும்.  மின் கட்டணத்திலும் மாதாந்தம் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

நஷ்டத்தில் இயங்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை விமான சேவைகள் நிறுவனம், பெற்றோலிய கூட்டுத்தாபனம், மின்சாரசபை மறுசீரமைக்கப்படும்.  பணவீக்கத்தை 4 முதல் 6 சதவீதம் வரை வீழ்ச்சியடைச் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஐ.நா.வுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள பிரகடனத்திற்கமைய ஊழல், மோசடிகளை ஒழிப்பதற்கான சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.  இழக்கப்பட்ட சொத்துக்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை 2024 மார்சில் அரசியலமைப்பு கட்டமைப்பில் உள்ளடக்க எதிர்பார்க்கப்படுகிறது.  ஐ.எம்.எப். கடனுதவிக்கு அப்பால் முற்போக்கான பொருளாதார மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

நாணய நிதியத்துடனான இணக்கத்திற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்காவிட்டால்  அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியாது.  சகல கடன் வழங்குனர்களுடனும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவோம்.   கடன் விவகாரங்களில் எவ்வித ஒழிவு மறைவும் இருக்காது.

வரி அதிகரிப்புக்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் அறிந்துள்ள போதிலும் தற்போது பின்பற்றும் கொள்கைகளில் துரித மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.

நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினாலும் ஐ.எம்.எப்.பினாலும் 6 மாதங்களுக்கொருமுறை மதிப்பாய்வுக்குட்படுத்தப்படும்.  ஜூனில் முதலாவது மதிப்பாய்வு முன்னெடுக்கப்படும்.

தற்போதுள்ள வரி முறைமையை மாற்றுவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். திறைசேரி அதற்கான யோசனையை தயாரித்துக் கொண்டிருக்கிறது.

பொருளாதார நிபுணர்களாலும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பினருடனும் பேசி பொது இணக்கப்பாடு எட்டப்படும். மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ள துயரங்கள் தற்காலிகமானவை. இந்த அர்ப்பணிப்பிற்கான சாதகமான பிரதிபலன் வெகுவிரைவில் கிடைக்கும்.

சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுக்கமைய எதிர்வரும் 4 வருடங்களுக்கு உரிய நிதி ஒழுக்கத்துடன் பொருளாதார மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்தினால் எதிர்காலம் சிறந்ததாக அமையும். இவ்வழியிலிருந்து விலகினால் கடந்த ஏப்ரலில் ஏற்பட்டதை விட மோசமான நிலைமை ஏற்படும்.

சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டினால் மாத்திரம் திருப்தியடைய முடியாது. இது மற்றொரு முக்கிய பயணத்தின் ஆரம்பம் மாத்திரமே.  அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சகல கடன்களையும் மீள செலுத்தி கடன் பெறாத நாடாக இலங்கையை மாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.  நாமனைவரும் ஒரு தாய் மக்களாக செயற்பட்டால் இலங்கையை உலகின் பொருளாதார மையமாக மாற்ற முடியும்” என்றார்.