பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி தனிநபர் பிரேரணை முன்வைப்பு

இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் எனக் கோரி தனிநபர் பிரேரணை ஒன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தனிநபர் பிரேரணை நேற்றைய தினம் (05) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய அவர், பயங்கரவாத தடைச் சட்டம் கடந்த காலங்களில் குறிப்பாக தமிழ் மக்கள் மீது தவறான கைது, நீண்டகால விசாரணையில்லா சிறைவாசம், அடிப்படை உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டி காட்டினார்.

பயங்கரவாத தடைச் சட்டம் சர்வதேச அளவில் இலங்கையின் நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
நல்லிணக்கம் மற்றும் இன நல்லுறவை கட்டியெழுப்ப இந்த சட்டம் பெரும் தடையாக உள்ளது. அரசாங்கம் இதுகுறித்து தாமதமின்றி தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான விவாதம் மீண்டும் அரசியல் களத்தில் தீவிரமடைந்துள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.