ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இராணுவப் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 05ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் ஆயத்தில் அங்கம் வகிக்கும் நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் இன்று (30) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த நீதிபதி, வழக்கை விசாரிக்கும் மூவரடங்கி நீதிமன்ற ஆயத்தில் தற்போது வெற்றிடமாக உள்ள மற்றைய உறுப்பினர் பதவிகளுக்கு நீதிபதிகள் இன்னும் நியமிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
குறித்த வெற்றிடங்களுக்கு விரைவில் நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், அதுவரை வழக்கை டிசம்பர் 05ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதி அறிவித்தார். கிரித்தலே இராணுவ முகாமின் முன்னாள் கட்டளை அதிகாரி ஷம்மி குமாரரத்ன உட்பட இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஒன்பது உறுப்பினர்கள் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த ஒரு திகதியில், கிரித்தலே, ஹபரணை மற்றும் கொட்டாவ ஆகிய பிரதேசங்களில் வைத்து, பிரதிவாதிகள் மேலும் பெயரிடப்படாத நபர்களுடன் இணைந்து, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை ரகசியமாக அடைத்து வைக்கும் நோக்கத்துடன் கடத்தியதாகவும், மரணத்தை ஏற்படுத்தியதாகவும் சட்டமா அதிபரால் குற்றவியல் சட்டக் கோவை பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



