‘பொறுப்புக் கூறலினால் மாத்திரம் இலங்கையின் நீண்டகாலச் சவால்களுக்கு தீர்வைக் கண்டுவிட முடியாது’ என்று தேசிய சமாதானப் பேரவை தெரிவித்துள்ளது.
ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தேசிய சமாதானப் பேரவை, ‘இன மோதலுக்கு வழிவகுத்த ஆழமான காரணிகளைக் கையாளக்கூடிய அரசியல் தீர்வொன்று அவசியமாகும்’ என்றும் வலியுறுத்தியுள்ளது.
மூன்று முன்னாள் இராணுவ தலைவர்கள் உட்பட நான்கு இலங்கையர்களுக்கு எதிராக தடைகளை விதிப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் எடுத்த தீர்மானம் முக்கியமான ஒரு விவாதத்தை உருவாக்கியுள்ளது.
‘உலகின் வேறு பகுதிகளில் பாரிய வன்முறைகள் தடுக்க முடியாத அளவுக்கு தொடருகின்ற ஒரு நேரத்தில் பிரித்தானியா எடுத்திருக்கும் இந்த தீர்மானம், வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு நியமங்கள் பிரயோகிக்கப்படுவது பற்றிய விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது’ என்று தேசிய சமாதானப் பேரவை குறிப்பிட்டுள்ளது.
‘உண்மையைக் கண்டறிவதிலும் பொறுப்புக்கூற வைப்பதிலும் உள்ள நாட்டம் சகலருக்கும் ஒரே மாதிரியானதாகவும் அரசியல் நோக்கங்கள் இல்லாததாகவும் இருக்க வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை பக்கச்சார்பற்ற ஒரு சமூக அமைப்பு என்ற வகையில் வலியுறுத்திக் கூறுகிறது’.
‘குறிப்பிட்ட ஒரு தரப்புக்கு தெரிவு செய்யப்பட்ட முறையில் பிரயோகிக்கப்படுவதாக நீதி இருக்க முடியாது’.
‘இன்று பாலஸ்தீனத்திலும் யுக்ரைனிலும் இடம்பெறுவதைப் போன்று 16 தொடக்கம் 37 வருடங்களுக்கு முன்னர் அத்துமீறல்கள் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலுக்கும் பட்டலந்தவுக்கும் ஒரே மாதிரியான நீதி அவசியமாகிறது’ என்றும் அந்த பேரவை விடுத்தள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இலங்கையில் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஊடாக பாடுபடுவதாக பிரித்தானியா கூறியிருக்கிறது’.
‘இலங்கையின் மனித உரிமைகள் சீர்திருத்தங்களை ஆதரிப்பதிலும் உறுதிப்பாடு கொண்டிருப்பதாக அது கூறுகிறது’. இந்தநிலையில் ‘தீர்வு காணப்படாத மனித உரிமைகள் பிரச்சினைகள் நீண்டகால விளைவுகளைக் கொண்டிருக்கின்றன என்பதை தேசிய சமாதானப் பேரவை ஏற்றுக்கொள்கிறது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அத்துடன் மனித உரிமைகள் தொடர்பான அக்கறைகளை விரிவான ஒரு முறையில் இலங்கை கையாளத் தவறினால் மேலும் பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய ஆபத்து இருக்கிறது’.
‘மனித உரிமைகள் அக்கறைகளின் விளைவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி.பிளஸ் வர்த்தக சலுகைகளை இழக்கக்கூடிய சாத்தியப்பாடு இலங்கையின் பொருளாதார உறுதிப்பாட்டை அச்சுறுத்துகிறது’.
‘நம்பகத்தன்மை வாய்ந்த அவசர நடவடிக்கைகளின் அவசியத்தை இது தெளிவாக உணர்த்துகிறது’ என்று தேசிய சமாதானப் பேரவை தெரிவித்துள்ளது. ‘ஆனால், பொறுப்புக்கூறலுக்கான நடவடிக்கைகளினால் மாத்திரம் நாட்டின் நீண்டகால சவால்களுக்கு தீர்வுகளைக் கொண்டுவர முடியாது’. ‘இலங்கை அதன் இனமோதலுக்கான மூலவேர்க் காரணிகளை கையாளக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காணவேண்டியது அவசியமாகிறது’ என்று தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்தியுள்ளது.