மட்டக்களப்பு கிணற்றில் பெண் மீட்கப்பட்ட விவகாரம்: காவல்துறை விசாரணை

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் உறவினர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களின் நெருங்கிய உறவினர்கள் சிலர், எவ்விதமான தொழிலுக்கும் செல்லாத நிலையில் முச்சக்கர வண்டிகள் மற்றும் வீடுகள் போன்ற சொத்துக்களைக் கொள்வனவு செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

முறையான வருமானம் இன்றி இவர்களுக்கு இவ்வளவு பெரிய தொகை பணம் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்தும், இந்தச் சொத்து சேர்ப்புக்கும் கடத்தப்பட்ட பெண்ணுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும், இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான முச்சக்கர வண்டி சாரதி ஏற்கனவே பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்களின் அடிப்படையில், குறித்த குழுவினர் இன்னும் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தகவல் பகிர்ந்துள்ளார்.

கைதானவர்களின் நிதிப் பின்னணி மற்றும் அவர்களது உறவினர்களின் வங்கிப் பரிவர்த்தனைகள் தற்போது தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.