மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினரின் தாக்குதலில் இருவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கும் இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.
நேற்று இரவு 10 மணியளவில் குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியில் பயணித்த இளைஞர்கள் மீது போக்குவரத்துப் காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரியவருகின்றது.
பிரதான வீதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், உள்வீதியில் நின்ற போக்குவரத்து காவல்துறையினரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்துப் காவல்துறையினர் மின்கல விளக்கை (Torch Light) ஒளிரவிட்டு குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது, அதனை மீறிச் சென்றவர்களைத் தடுக்க முற்பட்டவேளையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகப் காவல்துறையினர்தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அவர்களைத் தலைக்கவசத்தால் தாக்கியதாகவும், இருவரும் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்த பின்னரும் போக்குவரத்துப் காவல்துறையினர் தொடர்ந்து தாக்கியதாகவும் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞர்கள் செட்டிபாளையம் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதனிடையே, அப்பகுதிக்குக் காரிலும் பொலிஸ் வாகனத்திலும் மேலதிக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டதால், அங்கிருந்த இளைஞர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களை நிறுத்துவதற்குப் பல்வேறு வழிகள் உள்ளபோதும், தலைக்கவசத்தால் தாக்கியதுடன், அவர்கள் கீழே விழுந்த பின்னரும் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இது பொலிஸாரின் அராஜகமான செயற்பாடு எனவும் அங்கிருந்தவர்கள் குற்றஞ்சாட்டினர்.
சம்பவத்தையடுத்து குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் காவல்துறையினரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தாக்குதல் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞர்களால் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.



