இலங்கையின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் இருந்து கம்பி இணைப்பு மூலம் ஆயிரம் மெகாவோட் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் திட்டப்பணிகள் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட உள்ளதுடன் அது எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு நிறைவடையும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரகே தெரிவித்துள்ளார்.
இந்த மின்சார திட்டம் சம்பந்தமான சுற்றுச்சூழல் அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக 400 மில்லியன் டொலர்கள் செலவாகும்.
தலைமன்னாரில் இருந்து தமிழ்நாடு வரை கடலில் அமைக்கப்படும் தூண்கள் ஊடாக கம்பி இணைப்பு மூலம் மின்சாரம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதுடன் முதல் கட்டமாக 500 மெகாவோட் மின்சாரமும் இரண்டாவது கட்டமாக 500 மெகாவோட் மின்சாரமும் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மின் இணைப்பு திட்டத்திற்கான செலவை இந்தியா ஏற்பது அல்லது மூன்றாவது தரப்பின் உதவியை பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இவ்வாறு மினசாரத்தை பரிமாறிக்கொள்கின்றன.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மின்சார விநியோக இணைப்பு தொடர்பில் நீண்டகாலமாக கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளதாகவும் பத்திரகே கூறியுள்ளார்.இரண்டு இணைப்புகளை கொண்டதாக இந்த மின்சார விநியோக திட்டம் நிர்மாணிக்கப்பட உள்ளது.
இலங்கையில் மேலதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் போது இந்தியாவுக்கு வழங்கவும் இலங்கையில் மின்சார தேவை அதிகரிக்கும் போது இந்தியாவிடம் இருந்து விலைக்கு வாங்கவும் இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் பத்திரகே மேலும் கூறியுள்ளார்.