காங்கேசன்துறை சீமேந்து ஆலைக்கு அருகில் 35 ஏக்கர் நிலம் துறைமுகங்கள் அதிகார சபைக்கு வழங்குவது தொடர்பில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு தேவையான 50 ஏக்கர் நில சுவீகரிப்பு தொடர்பிலேயே ஆராயப்பட்டது.
காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஆய்வுகள், மதிப்பீடுகள் நிறைவு பெற்றபோதும் அதன் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் அந்தப் பணியை ஆரபிக்கவென அமைச்சரவை அனுமதி 2020 ஆண்டு ஜனவரி 9 ஆம் திகதிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு 2020 ஜனவரி 13ஆம் திகதிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இதில் அனுமதிகோரிய 50 ஏக்கர் நிலத்தில் 15 ஏக்கர் நிலம் ஏற்கனவே துறைமுக அதிகார சபைக்கு உரியது எனவும், ஏனைய 35 ஏக்கரும் அரச மற்றும் தனியார் நிலம் எனவும் கண்டறியப்பட்டது. இந்த 35 ஏக்கரில் வைத்தியசாலை, பூங்கா, காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலை ஆகியவற்றுடன் தனியாருக்குச் சொந்தமான 12 ஏக்கர் நிலமும் உள்ளது என அப்போது உறுதிசெய்யப்பட்டது.
இதன் பிரகாரம் 2020இல் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது. இருந்தபோதும் இந்த நிலங்கள் சுவீகரிப்பு முயற்சியிலேயே இருந்தன. அதனை முன்னெடுக்கும் பணியை இறுதி செய்யும் நோக்கிலேயே துறைமுக அதிகார சபையின் அதகாரிகள், மாவட்ட மேலதிக அரச அதிபர் என சகல தரப்பும் உள் அடக்கிய விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.



