ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது எதிர்காலம் குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்த, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சரியான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தாமல், இந்த வேலைத்திட்டத்தை இடைநடுவில் கைவிட்டால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என்று கூறியுள்ளார்.
Ask Ranil நிகழ்ச்சியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே இதனைத் தெரிவித்தார்.
மேலும் கடந்த 75 வருட கால ஆட்சியாளர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக எதனையும் செய்யவில்லை என சில தரப்பினர் குற்றம் சுமத்திய போதிலும் அது உண்மை இல்லையென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தேசிய பொருளாதாரம் தொடர்பில் பேசி மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் உருவாக்கிய நிலைப்பாடே நாட்டின் விரைவான பொருளாதார அபிவிருத்திக்கு தடையாக அமைந்ததெனவும் தெரிவித்தார்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண புதிதாக சிந்தித்து கட்சி பேதமின்றி புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக பாரிய குழு தன்னோடு இருப்பதாலேயே ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.