மட்டக்களப்பில் வாள்வெட்டு கும்பலை இல்லாதொழிக்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுக் கும்பலை இல்லாதொழிக்குமாறு வலியுறுத்தியும் காத்தான்குடி பொலிஸாரின் பக்கசார்பான செயற்பாட்டை கண்டித்தும் ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (03) பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்துக்குச் சென்று மகஜர் ஒன்றை கையளித்தனர். அத்துடன் ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றை பிரதேச செயலாளரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் கையளித்தனர்.

கடந்த மாதம் 20ஆம் திகதி இரவு ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது 6 பேர் கொண்ட குழு வாள்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இருவர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கடந்த 24ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், வாள்வெட்டுடன் தொடர்புடைய மேலும் இருவரை கண்டுபிடித்து கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

‘இந்த வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக பொலிஸார் செயற்பட்டு வருவதாகவும் இதனால் பிரதேசத்தில் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்’ என்றும் சுட்டிக்காட்டி, மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.