அதிக அர்ப்பணிப்புக்களை மக்கள் செய்துள்ளனர் : பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டுக்கமைய பெரும்பாலான நிபந்தனைகள் நிறைவேற்றியுள்ளோம். இதனால் இந்நாட்டு மக்கள் தமது இயலுமையை விட , அதிக அர்ப்பணிப்புக்களையும் செய்துள்ளனர். எனவே செப்டெம்பரில் இரண்டாம் கட்ட கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித சிக்கலும் காணப்படாது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (11) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாட்டு ஒப்பந்தத்துக்கமைய எமக்கு முதற்கட்ட கடன் தொகை மாத்திரமே கிடைக்கப் பெற்றுள்ளது. ஒப்பந்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ள என்பதன் அடிப்படையிலேயே நாணய நிதியம் அடுத்தடுத்த கட்ட கடன் தொகைகளை விடுவிக்கும்.

அத்தோடு எம்மால் நிறைவேற்றப்பட்டுள்ள நிபந்தனைகள் நாணய நிதியத்தினால் மீளாய்வுக்கும் உட்படுத்தப்படும். அதற்கமைய நாமும் பெரும்பாலான நிபந்தனைகளை நிறைவேற்றியுள்ளோம். அதற்கமைய வரி மற்றும் வரியற்ற வருமானங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. விலை சூத்திரங்களுக்கமைய எரிபொருள் , சமையல் எரிவாயு என்பவற்றின் விலைகள் மறுசீரமைக்கப்படுகின்றன.

ஊழல் ஒழிப்பு சட்ட மூலம் விரைவில் நிறைவேறும் தருவாயில் உள்ளது. அரச செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துக்கும் மேலாக தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இவற்றுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தீர்மானங்களால் , தமது இயலுமையை விட அதிக அர்ப்பணிப்புக்களை மக்கள் செய்துள்ளனர். அதற்கமைய செப்டெம்பரில் நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் தொகையைப் பெற்றுக் கொள்வதில் எவ்வித தடையும் இருக்காது என்று நம்புகின்றோம் என்றார்.