மன்னார் மாவட்டத்தில் காற்றாலை திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகியுள்ளது. இத்திட்டத்துக்கு அப்பிரதேச மக்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர். மக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படாமல் சில தனியார் நிறுவனங்களை திருப்திப்படுத்த கூடியவாறு செயற்பட்டமையினாலும் மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் வலுசக்தி அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
வரவு செலவுத் திட்டத்தில் மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்திக்கும் உட்கட்டமைப்பு நவீன மயப்படுத்தலுக்கும் இந்த வரவு செலவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவேற்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுப்பிக்கதக்க வலுசக்தியில் வடக்கு, கிழக்கில் காற்றாலை திட்டம் மிகவும் பாதுகாப்பான மீள் புதுப்பிக்கதக்க சக்தியை உற்பத்தி செய்யக் கூடிய முறையாக உள்ளது. காற்றாலையில் மிகவும் குறைந்த உற்பத்தி செலவு மற்றும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு குறைவாகும்.
இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் காற்றாலை திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகின்றது. இதில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களால் மக்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த திட்டத்திற்காக முதலீடு செய்த நிறுவனத்தின் செயற்பாடு மக்கள் எதிர்ப்புக்கு காரணமாக இருக்கின்றது.
மக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் செய்யாமையினாலும் சில தனியார் நிறுவனங்களை திருப்திப்படுத்தக்கூடியவாறு செயற்பட்டமையினாலும் மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். முதல் கட்ட திட்டத்தால் மழை நீர் வழிந்தோட முடியாது சில நாட்களுக்கு வெள்ள நிலைமை நிலவும் காணப்படுகின்றது.
அங்குள்ள மக்கள் இந்த திட்டத்தில் கவனிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. வேலை வாய்ப்புகளை அந்த சமூகத்தினருக்கு வழங்காமை பிரச்சினைக்குரியதாக உள்ளது.
இதேவேளை சூரிய சக்தி மின்சாரம் தொடர்பிலும் பிரச்சினைகள் உள்ளன. மக்கள் இந்த திட்டத்திற்கு ஆவலாக இருக்கின்றனர். ஆனால் அந்த திட்டத்தை தமது வீட்டுக் கூரையில் பொருத்த மக்கள் தீர்மானித்தாலும் மின்சார சபை அதன் கொள்ளவு முறைமை இல்லாமையினால் அதற்கான அனுமதியை வழங்காமல் இருக்கின்றனர்.
அத்துடன் பொதுவான பிரச்சினைகள் பல உள்ளன. அதாவது குறைந்த வருமானமுடைய குடும்பங்கள் மின் இணைப்பை பெற்றுக்கொள்ள 40 ஆயிரம் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது.
குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள். விசேட தேவையுடைய குடும்பங்களுக்கு இலவச மின் இணைப்பை வழங்க வேண்டும். குறைந்த மின் கட்டணம் அல்லது மானிய முறையில் மின்கட்டணத்தை குடிசைக் கைத்தொழிலாளர்கள், சிறு உற்பத்தியாளர்கள், சிறு விலங்கு பண்ணையாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் அதை வழங்க வேண்டும்.
அதேபோன்று விவசாயம் மற்றும் மின்பிடி நடவடிக்கைகளுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டதை போன்று மானிய அடிப்படையில் எரிபொருள் வழங்குவதற்காக இந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை.
குறிப்பாக மீளக் குடியேறிய மக்கள் மற்றும் யுத்தத்தால பாதிக்கப்பட்ட மக்கள் செய்யும் விவசாயம் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு குறைந்த விலையில் மானிய அடிப்படையில் எரிபொருள் வழங்க நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.



