மக்களே தங்களின் இறைமையைத் தாங்களே உறுதிப்படுத்த வேண்டிய புதிய உலக அரசியல் முறைமை | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 355

கடந்த வாரத்தில், சீனா யப்பானை இரண்டாம் உலகப் போரில் வெற்றி கொண்டதற்கான 80வது ஆண்டு வெற்றிப் பெருவிழா,  இதுவரை உலகம் கண்டிராத சீனாவின் புதிய  ஏவுகணைகளை போர்விமானங்களை காட்சிப்படுத்தியவாறு, பன்னீராயிரம் படையினரின் அணிவகுப்புடன் உலங்கு வானூர்திகள் ‘நீதி வெல்லும்-அமைதி வெல்லும்-மக்கள் வெல்லுவர்’ என்னும் வரிகள் பொறிக்கப்பட்ட பட்டிகைகளை போர் உலங்கு வானூர்திகள் பறக்கவிட்ட நிலையில் சீன ரஷ்ய வடகொரியத் தலைவர்களுடன் இருபதுக்கு மேற்பட்ட உலகத்தலைவர்கள் அணிவகுப்பு மரியாதையில் பங்குபற்றிட சீனாவின் அரசுத்தலைவர் ஷி ஜின்பிங் தலைமையில் நடைபெற்றது, இப்பெருவிழாவில் சீன அரச அதிபர் ஷி ஜின்பிங் இங்கு உரையாற்றுகையில் “உலகம் ஒருபோதும் காட்டாட்சி சட்டத்திற்குத் திரும்பக்கூடாது. அது பலவீனமானவர்களை வலிமையானவர்கள் சுரண்டும் இடம். சீன மக்களின் எழுச்சியை யாராலும் தடுக்கவோ அழிக்கவோ முடியாது. நாங்கள் ஒருபோதும் பயப்பட மாட்டோம். உலகை வழிநடத்தும் நாடுகளில் சீனாவும் ஒன்று.” என புதிய உலக அரசியல் முறைமையின் பன்மைத்தன்மையை உலகிற்குப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
இதனை அமெரிக்காவினை அழிக்கும் கூட்டாகக் கருதிய அமெரிக்க அரசுத்தலைவர் சீன ரஸ்ய வடகொரிய முக்கூட்டுக்கு கிண்டலாக வாழ்த்துத் தெரிவித்து இந்தியாவையும் சீனா ரஸ்யாவிடம் அமெரிக்கா இழந்து விட்டதாகவும் கூறி அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சினை அமெரிக்காவின் யுத்த அமைச்சாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் இந்நிலைப்பாட்டுக்கு எதிர்வு கூறலாகவே “இன்று மனிதகுலம் அமைதி அல்லது போர், உரையாடல் அல்லது மோதல், வெற்றி அல்லது வீழ்ச்சி என்ற தேர்வை எதிர்கொண்டுள்ளது” என உலகிற்குத் தனது வெற்றிப் பெருவிழா உரையில் வெளிப்படுத்திய சீன அரசுத்தலைவர் “மனித நாகரிகத்தின் உன்னத இலக்கு வெற்றி பெற வேண்டும்” எனக் கூறி “ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிராகவும் ஒன்றுபட அழைப்பு விடுக்கிறேன்” என நாடுகளின் இறைமையைப் பாதுகாப்பதையே சீனா தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் என்பதை உறுதி செய்திருந்தார்.
ஆயினும் நாடு என்கின்ற நிலையில் காலனித்துவவாதிகள் கைப்பற்றிய ஈழத்தமிழர்கள் போன்ற சிறுதேச இனங்கள் காலனித்துவவாதிகளுடன் தங்கள் இறைமை மீட்புக்காக போராடிய நிலையிலும் காலனித்துவவாதிகளின் சூழ்ச்சிகளால் காலனித்துவத்தால் தீ்ர்க்கப்படாத ஐக்கிய நாடுகள் சபையினால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாக இன்றும் தங்களின் இறைமையை மீளுறுதி செய்யும் முயற்சியில், இனஅழிப்பை, இனத்துடைப்பைப், பண்பாட்டு இனஅழிப்பைத் தங்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் நாளாந்த வாழ்வுக்கும் இனங்காணக்கூடிய அச்சமாகக் கண்டு தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தங்களின் பிரிக்கப்பட இயலாத தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அமைக்க முடியாமல் இருக்கின்றார்கள். இம் மக்கள் தங்களின் இறைமையைத் தாங்களே உறுதிப்படுத்த வேண்டிய புதிய உலக அரசியல் முறைமையைத் தோற்றுவித்துள்ளது சீன அரசத்தலைவரின் உரை என்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாக உள்ளது. இதனை ஈழத்தமிழர்கள் எவ்வாறு செய்யலாம் என்பதற்கும் சீனாவின் அரசத்தலைவரின் பேச்சில் விடை உள்ளது.
இன்று மனிதகுலம் தேர்வாகக் கொண்டுள்ளதாகச் சீன அரசுத்தலைவர் கூறும் மனிதகுலத்திற்கான தேர்வுகளில் ஈழத்தமிழர்கள் அமைதி அல்லது போர் என்பதில் அமைதியையும், மோதல் அல்லது உரையாடல் என்பதில் உரையாடலையும், வெற்றி அல்லது வீழ்ச்சி என்பதில் வெற்றியையுமே தங்களின் தேர்வுகளாகக் கொண்டு செயற்பட வேண்டியவர்களாக உள்ளனர். இதற்கு ஈழத்தமிழர்கள் தங்களிடை இவற்றை முன்னெடுப்பதற்கான உரையாடல்களைத் தாயகத்திலும் அனைத்துலகிலும் வாழும் ஈழத்தமிழரிடை தொடங்கி அதன் விரிவாக்கமாகத் தங்களின் வீழ்ச்சியைத் தடுக்க தங்களின் இறைமையை உறுதிப்படுத்துமாறு  உலக நாடுகளின் மக்களுடன் உரையாடல்களை வேகப்படுத்தினாலே தங்களுக்கான பாதுகாப்பான அமைதியை மீள் உற்பத்திசெய்ய முடியும் என்பதே இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது. இதற்கான ஆளணிச் செயலணி குழுக்களை ஈழத்தமிழர்கள் வேகமாக அமைக்க வேண்டுமென்பதே இலக்கின் அழைப்பாக உள்ளது.
இந்த செப்டெம்பர் மாதத்து 7ம் நாளுடன் யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவி கிருசாந்தி குமாரசாமி தேர்வு எழுதி விட்டு வீட்டுக்குத் திரும்பும் வழியில் சந்திரிகா பண்டாரநாயக்கா காலச் சிறிலங்கா இராணுவம் அமைத்திருந்த பரிசோதனைச் சாவடியில் சிறிலங்கா இராணுவத்தினரால் பரிசோதனைக்கென தடுக்கப்பட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட 29ம் ஆண்டை இன்று செம்மணி சித்துப்பாத்தியில் இதுவரை கிடைக்கப்பெற்ற 240 மனித எலும்புக்கூடுகளின் நீதிக்கான ஓலத்துடன் சேர்த்து ஈழத்தமிழர்கள் தாயகத்திலும் உலகெங்கிலும் மீள்நினைவேந்தல் செய்கின்றார்கள். ஆயினும் எட்டாம் திகதி  ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா குறித்த மனித உரிமைகள் அறிக்கை ஒப்புக்குச் சிறிலங்கா பல ஆண்டுகளாக இராணுவம் மற்றும் படைத்தரப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான மனித உரிமைகள் மீறல்களை ஏற்றுக்கொள்ளத் தவறிவிட்டது எனக்கூறிவிட்டு உண்மை மற்றும் நீதியை எடுத்துக்காட்டுவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு சிறந்த வாய்ப்பும் வரலாற்றுச் சந்தர்ப்பமும் கிட்டியுள்ளதாகச் சிறிலங்காவின் உள்ளக பொறிமுறைக்குள்ளேயே ஈழத்தமிழர்கள் மேலான சிறிலங்காவின் யுத்தக்குற்றச்செயல்கள், மனிதாயத்துக்கான குற்றங்கள், மனித உரிமை வன்முறைகளுக்கு தண்டனை நீதியையோ பரிகாரநீதியையோ வழங்கக் கூடிய வகையிலேயே மதியும் நிதியும் அளிக்கும் அறிக்கையாகவே  அமையும் என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது. கூடவே ரோம் உடன்படிக்கையில்  சிறிலங்கா அரசாங்கத்தைக் கையொப்பமிடுமாறும் சிறிலங்காவின் நீதிமன்ற கட்டமைப்புக்கள் விசாரணைகளை அனைத்துலக தரத்தில் நடத்துமாறும் வலிந்து  காணாமல்  ஆக்கப்பட்டோருக்கு இந்த அரசாங்கம் நிறுவியுள்ள பணிமனை மூலம் அனைத்துலக கண்காணிப்பில் செயற்படுமாறும் இந்த அறிக்கை அழைப்பு விடுக்கும். இந்த அறிக்கைக்கு அமெரிக்காவினதும் மேற்குலக நாடுகளதும்  ஆதரவைத் தேடும் வகையிலேயே சீனாவின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டிலோ அல்லது சீனாவின் யப்பான் மீதான வெற்றியின் 80வது ஆண்டுப் பெருவிழாவிலோ சீன ஆதரவு அரசான சிறிலங்காவின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தான் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்துள்ளது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக அமைகிறது. ஒரு கல்லில் இரு மாங்காய் என இந்தியாவுக்கும் தேசிய மக்கள் சக்தி சீனாவுக்குச் சார்பானதல்ல என்ற நல்லெண்ணத்தை உருவாக்கவும் இது உதவியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் சீனாவுடன் நெருங்கிய பொருளாதாரத் தொடர்புடைய இத்தாலியுடன் கடந்த வாரத்தில் சிறிலங்காவின் பிரதமர் முதன்முறையாக கூட்டுக் கலந்துரையாடல் நடத்தி அதன்வழி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவையும் சிறிலங்கா பெற முயற்சித்துள்ளது.
இவைகள் எல்லாமே ஈழத்தமிழர்கள் செயலணிகளை அமைத்தே தங்கள் எதிர்காலத்தை  முன்னெடுக்க வேண்டுமென்பதை உறுதிப்படுத்துகின்றன என்பதே இலக்கின் இவ்வார ஆணித்தரமான எண்ணம்.  மேலும் வெளிநாடுகளுக்கு ஒரு நாட்டின் மக்களின் இறைமையப் பாதுகாக்கும் நோக்கை விடத் தங்கள் நலனே முக்கியம் என்பதற்கு உக்ரேனில் போரழிவு தொடர்கின்ற நிலையில் 26 ஐரோப்பிய நாடுகள் சமாதானத்தின் பின்னர் பாதுகாப்புக்கென நிலைகொள்ள முயற்சிப்பதும், பலஸ்தீனிய தேசத்துக்கான அங்கீகாரத்தை இவ்வாரத்தில் பிரான்சு உட்பட்ட மேற்குலக நாடுகள் சில செய்ய இருக்கின்ற நிலையிலும் பலஸ்தீன மக்களின் இருப்பே இல்லாதாக்கப்படுவதும் சாட்சியங்களாகின்றன. இந்நிலையில் எந்த நாட்டிலும் தங்கி நில்லாது தங்கள் மக்களிலேயே தங்கும் செயலணிகள் காலத்தின் தேவையாகிறது என்பது இலக்கின் உறுதியான எண்ணம்.
 ஆசிரியர்

Tamil News