யாழ்ப்பாணம் – வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக, இன்றைய தினமும் (06) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தையிட்டி திஸ்ஸ விகாரை, சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினமும் எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
பதாகைகள் மற்றும் கறுப்புக் கொடிகள் என்பவற்றை ஏந்தியவாறும் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பியவாறும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதேநேரம் திஸ்ஸ விகாரைக்கு வழிபாடுகளுக்காக சென்றிருந்த சிங்கள மக்களிடம் உண்மையை எடுத்துரைக்கும் சம்பவங்களும் இன்று இடம்பெற்றிருந்தன.
இதேவேளை இதன்போது பாதுகாப்பு பணிகளுக்காக அதிகளவான பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.