அனர்த்தத்தால் மக்கள் பாதிப்பு: ரணில் தலைமையில் அரசுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட நூற்றுக்கணக்கான உயிரிழப்பு மற்றும் பல கோடி ரூபா சொத்து சேதத்தை முன்கூட்டியே முகாமைத்துவம் செய்து நிர்வகிக்காமையானது மனித சமூகத்துக்கு மேற்கொள்ளப்பட்ட அநீதி என்பதால் அரசாங்கத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்காக எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செயற்பாட்டுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமைத்துவம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் பல்வேறு எதிர்க் கட்சிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

இந்த விடயம் தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை முதல் நிலை சட்ட வல்லுநர்கள் நூறு பேரின் பங்குபற்றலுடன் கொழும்பிலுள்ள முதல்தர ஹோட்டலொன்றில் அண்மையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

அந்தக் கலந்துரையாடலின்போது அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் தலைமையில் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் பிரதிவாதிகளாக அனர்த்த முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான அமைச்சர், மாகாண ஆளுநர்கள் உள்ளடங்கலாக இதற்குப் பொறுக்கூற வேண்டிய அரச அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபரை பெயர் குறிப்பிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

09 மாகாணங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் 1,500 சட்டத்தரணிகள் முறைப்பாடு செய்யும் தரப்பின் சார்பில் சுயேச்சையாக ஆஜராகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.