இந்தியாவிலிருந்து காங்கேசன்துறைக்கு ஏப்ரல் 29 முதல் பயணிகள் கப்பல் சேவை

இந்தியாவின் பாண்டிச்சேரி காரைக்கால் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு முதலாவது பயணிகள் கப்பல் சேவை ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி வருகை தர உள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.

பயணிகள் படகுச் சேவையினை ஆரம்பிப்பது தொடர்பாக அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்த சேவையினை ஆரம்பிக்கும்போது காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் கீழ் புதிய பயணிகள் முனையம் நிர்மாணிக்கப்படுகிறது.

இதற்காக இலங்கை துறைமுக அதிகாரசபை 144 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக்கொடுத்துள்ளதுடன் அதன் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படுகிறது.

தற்போது இலங்கை கடற்படையினரால் முனையத்தின் ஆரம்ப நிர்மாணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு ஏப்ரல் மாதம் 02ஆவது வாரத்துக்குள் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டு இலங்கை துறைமுக அதிகார சபையிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இந்த கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதால் இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள எந்தவொரு வியாபாரிக்கும் இந்த சேவையுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

இச்சேவைக்கு மேலதிகமாக காங்கேசன்துறை துறைமுகம் விரிவாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்காக தற்போது இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள கடன் தொகை போதுமானதாக இல்லை என்பதால் இன்னும் 16 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை இந்திய எக்சிம் வங்கியிடமிருந்து கோரப்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பயணிகள் படகு உரிமையாளர்கள் ஒரு பயண வழிக்கு பிரயாணி ஒருவரிடம் 50டொலர்கள் அறவிடுவதுடன் 100கிலோகிராம் பொருட்களை கொண்டு செல்ல முடியும் என்று குறிப்பிட்டனர்.

கப்பல் சேவையினூடாக ஒரு தடவைக்கு 150 பயணிகளை கொண்டு செல்ல முடியும் என்றும் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகம் வரை பயணிப்பதற்கு 04 மணித்தியாலங்கள் எடுப்பதுடன், முதலில் பகல் வேளையில் மட்டுமே பயணச் செயற்பாடுகளை நடாத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.