மாவீரர் வாரத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (20) காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் நடைபெற்றது.
மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் உறவுகளுடன் சுமார் 150க்கும் மேற்பட்டோரின் பங்குபற்றலுடன் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இதன்போது மாவீரர்களை நினைவுகூர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதில் கலந்துகொண்ட மாவீரர்களின் உறவுகள் கண்ணீர் மல்க உயிர் நீத்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அதனையடுத்து, மாவீரர் தியாகங்கள் பற்றிய உரைகள் நடத்தப்பட்டதோடு, மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோருக்கான கௌரவங்கள் அளிக்கப்பட்டது.
பின்னர், இந்நிகழ்வின் நினைவாக மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த மதிப்பளிப்பு நிகழ்வில் அருட்தந்தையர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.


