நம்பத்தகுந்த நண்பனாக இலங்கையுடன் இருப்போம் – பாகிஸ்தான் அமைச்சர் தெரிவிப்பு

பேரனர்த்தத்தை அடுத்து இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகளையும், பாதிக்கப்பட்ட மக்கள் வெளிப்படுத்திய தைரியத்தையும் பெரிதும் பாராட்டும் அதேவேளை, இப்போதும், எப்போதும் பாகிஸ்தான் ஒரு நம்பத்தகுந்த நண்பனாக இலங்கை மக்களுடன் ஒன்றாக நிற்கும் என பாகிஸ்தான் கடற்பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் மொஹமட் ஜுனைட் அன்வர் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

‘டித்வா’ சூறூவளி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களில் பல நூற்றுக்கணக்கானோர் பலியாகியிருப்பதுடன் இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெருக்கடி மிகுந்த இத்தருணத்தில் சர்வதேச நாடுகள் பலவும் இலங்கைக்கு உதவிகளை வழங்கிவரும் நிலையில், பாகிஸ்தானும் பல்வேறு நிவாரண மற்றும் மனிதாபிமான உதவிகளைக் கட்டம் கட்டமாக வழங்கிவருகிறது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள பாகிஸ்தான் கடற்பிராந்திய விவகாரங்களுக்கான அமைச்சர் மொஹமட் ஜுனைட் அன்வர் சௌத்ரி ,’இந்தக் கடினமான வேளையில் பாகிஸ்தான் இலங்கையுடன் தோளோடு தோளாக நிற்கின்றது. பேரனர்த்தத்தை அடுத்து இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகளையும், பாதிக்கப்பட்ட மக்கள் வெளிப்படுத்திய தைரியத்தையும் நாம் பெரிதும் பாராட்டுகின்றோம். இவ்வேளையில் இலங்கையைச்சேர்ந்த எமது சகோதர, சகோதரிகளுக்கு அவசிமான மனிதாபிமான மற்றும் தொழில்நுட்ப உதவிகளை இயன்றவரை வழங்குவதற்கு பாகிஸ்தான் தயாராக இருக்கின்றது’ என்றார்.