தீப்பிழப்புகளுடன் எங்கள் நாடு போர்ச் சூழலில் இருப்பதாக கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
கிரீஸில் கடந்த சில நாட்களாகவே காட்டுத் தீ தீவிரம் காட்டி வருகிறது. நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதால் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கிரீஸ் சென்றுள்ள சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்துள்ளன.
இதுகுறித்து கிரீஸ் அரசு தரப்பில், “காட்டுத் தீ மிகவும் ஆபத்தானது. தீர்மானிக்க முடியாதது. காட்டுத் தீயால் பாதிக்கப்படக் கூடிய பகுதிக்கு நீங்கள் பயணிக்க வேண்டியிருந்தால், பயணம் செய்வதற்கு முன், உங்கள் பயண ஆப்பரேட்டரை தொடர்புகொண்டு நீங்கள் செல்லும் பகுதி காட்டுத் தீயினால் பாதிக்கப்படவில்லையா என்பதைச் சரிபார்த்து கொள்ளவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Greece struggled to contain a wildfire west of Athens that burned forestland for a fifth straight day, leading to the deaths of dozens of animals. More than 100 houses and businesses have been severely damaged from this wildfire. pic.twitter.com/c44PfQkeTM
— CBS News (@CBSNews) July 21, 2023
மேலும், கிரீஸின் கிரீட் நகரம் காட்டுத் தீயினால் தீவிர பாதிப்புக்கு உள்ளாகும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கிரீஸின் ரோட்ஸ் நகரம் காட்டுத் தீயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சுமார் 30,000-க்கும் அதிகமான மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் இதுவரை இரு பைலட்கள் உயிரிழந்துள்ளனர்.
தீப்பிழப்புகளுடன் எங்கள் நாடு போர்ச் சூழலில் உள்ளதாகவும், தீயை அணைப்பதில் அரசு முழு கவனம் எடுத்து வருவதாகவும் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தெரிவித்துள்ளார். காட்டுத் தீயின் தீவிரம் வியாழக்கிழமை முதல் குறையும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.