மின் கட்டணத்தை அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக எதிர்க்கட்சி எச்சரிக்கை

அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதார முகாமைத்துவம் மற்றும் எதிர்வரும் மின்சாரக் கட்டண உயர்வு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்து அனைவருக்கும் சலுகை வழங்குவதை விட, அந்தப் பணத்தை அஸ்வெசும போன்ற திட்டங்கள் மூலம் ஏழை மக்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் திறைசேரியிடம் தற்போது 1 டிரில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் உள்ள நிலையில், அதில் ஒரு பகுதியைச் சாதாரண மக்களின் நலனுக்காக ஏன் ஒதுக்க முடியாது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு நாட்டில் வறுமை அதிகரித்து வருவதாகவும், அதற்கு இந்த அரசாங்கத்திடமும் முறையான தீர்வுகள் இல்லை என்றும் அவர் சாடினார். மின்சாரக் கட்டணம் விரைவில் 8 வீதம் முதல் 10 வீதம் வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
எதிர்க்கட்சியில் இருந்தபோது QR. முறைமை மற்றும் எரிபொருள் விலை சூத்திரத்தை எதிர்த்தவர்கள், இன்று ஆட்சியில் அமர்ந்து அவற்றையே பயன்படுத்துவது வேடிக்கையானது என ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.
வரி விதிக்க மாட்டோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது மக்கள் மீது பாரிய வரிச் சுமைகளைச் சுமத்துவதாக அவர் குற்றம் சுமத்தினார்.
தொடர்ச்சியாக நஷ்டமடையும் ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 100 பில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழிந்துள்ளதை அவர் விமர்சித்தார். நஷ்டமடையும் அரச நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதன் மூலம் அல்லது ‘மக்கள்மயமாக்குவதன்’ மூலம் அரசாங்கம் தனது சுமையைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்தார்.
எரிபொருள் கூட்டுத்தாபனம் 90,000 கோடி ரூபா நஷ்டமடைவதற்கு ஜே.வி.பியின் தொழிற்சங்கங்களே காரணம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.