நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அவற்றுக்கு உரிய தீர்வுகளை அரசாங்கம் இதுவரை வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு அரசாங்கத்திடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதாகவும், ஆனால் மக்களுக்கு ஒரு விசேட நிவாரணப் பொதியை வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தவறிவிட்டது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வெள்ளிக்கிழமை (03) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகில் உள்ள பல நாடுகள் எரிபொருளுக்கான வரிகளைக் குறைத்து நுகர்வோருக்குப் பலன்களை வழங்கியுள்ளன என்றும், உழைக்கும் மக்களின் வாழ்க்கைச் சுமையையும் அழுத்தங்களையும் குறைப்பதற்காக அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் பல்வேறு வரிச் சலுகைகளை வழங்கியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நமது நாட்டின் நிலைமை இதற்கு நேர்மாறாக உள்ளது.
இங்கு எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம் மற்றும் வரிச்சுமை போன்ற அனைத்தும் அதிகரிக்கப்பட்டு மக்கள் மீது அதிகபட்ச சுமை சுமத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அரசாங்கம் திறைசேரியில் ட்ரில்லியன் கணக்கில் பணம் நிறைந்து வழிவதாகத் தம்பட்டம் அடித்துக் கூறுகிறது. அப்படியானால், தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அந்தப் பணத்தைப் பயன்படுத்தி, சொல்லொணாத் துயரங்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாகி வாழ வழியின்றித் தவிக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கு ஏன் நிவாரணம் வழங்க முடியாது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.



