இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் ஆர்ப்பாட்டம்- சபையில் இருந்து வெளியேறிய கோட்டாபய

141 Views

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (05) பாராளுமன்ற சபை அமர்வில் கலந்து கொண்டிருந்தபோது, அவருக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறினார்.

இலங்கை பாராளுமன்ற கூட்டம் இன்று நடைபெற்ற போது, ‘கோட்டா கோ ஹோம்’ (Gota go home) என கோஷமெழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அவ்வாறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

சபையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்பில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, எதிரணியினர் இவ்வாறு ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.

பிரதமரின் உரையை இடைமறித்து, ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக கோஷமெழுப்பினர். இதனால் எழுந்த இந்த குழப்ப நிலைக்கு மத்தியில், பாராளுமன்ற சபை அமர்விலிருந்து கோட்டாபய  வெளியேறிச் சென்றார்.

இதனையடுத்து, சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். இன்றைய சபை அமர்வில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply