எதிர்க்கட்சிகளின் கூட்டு அரசாங்கத்துக்கு சவாலாக அமையாது: அமைச்சர் சுனில் அந்துநெத்தி

ஊழல்வாதிகளை ஒன்றிணைத்த எதிர்க்கட்சிகளின் கூட்டு அரசாங்கத்துக்கு சவாலாக அமையாது. நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்‌ஷர்களை மக்கள் ஒருபோதும் மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரமாட்டார்கள் என கைத்தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் அந்துநெத்தி தெரிவித்தார்.

கொழும்பில்  நடைபெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை மேம்படுத்த 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலகு கடன் வழங்கலுக்கும் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது.

பொருளாதார பாதிப்பினால்  2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில்  தேசிய கைத்தொழிற்றுறை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. வரி  அதிகரிப்பு மற்றும் புதிய வரி கொள்கையினால்  தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.  தேசிய கடன் மறுசீரமைப்பின் போது   தொழில் முயற்சியாளர்கள் குறித்து கடந்த அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

நாங்கள் ஆட்சிக்கு  வந்தவுடன் தொழில்  முயற்சியாளர்கள் மற்றும் கைத்தொழிலாளர்களுடன் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு முன்வைத்த திட்டங்களுக்கு தொழில் முயற்சியாளர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்கள்.

தேசிய கடன் மறுசீரமைப்பின் போது பாதிக்கப்பட்ட கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை  என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது.  கடன் நெருக்கடிக்குள் உள்ளாக்கப்பட்டிருந்த 1093 தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கைத்தொழிலாளர்களுக்கு  நிவாரணமளிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சின் தலையீட்டுடன் 200 முயற்சியாளர்களின் கடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. ஏனையோரின் கடன்களை மறுசீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. கடந்த கால ஊழல் மோசடிகள் குறித்து தற்போது முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதால் எதிர்க்கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்.சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே இவர்கள் இன்று ஒன்றிணைந்துள்ளார்கள்.

ராஜபக்‌ஷர்கள் ஊழல்வாதிகள் படுகொலையளிகள் என்று கடந்த காலங்களில் விமர்சித்தவர்கள் இன்று நாமல் ராஜபக்‌ஷவை இளவரசர் என்று அழைக்கிறார்கள்.இது நகைப்புக்குரியது என்றார்.