சிறீலங்காவில் ஆட்சி அமைத்துள்ள புதிய அரசு தனக்கான நிதியை பெற்றுக் கொண்டால் மட்டுமே பாரிய நிதி நெருக்கடியில் இருந்து தப்பிப்பிழைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்காவின் தோல்வியடைந்த பொருளாதாரத்தை கோவிட்-19 மேலும் பாதித்துள்ளது. வெளிநாட்டு கடன்களை மீள் செலுத்துவதற்கான நிதியை தேடவேண்டிய கட்டாயத்தில் புதிய அரசு உள்ளது. 2024 ஆம் ஆண்டு வரையிலுமான ஒவ்வொரு வருடமும் அதன் மீள்செலுத்தும் தொகை 4.5 பில்லியன் டொலர்களாகும். அதாவது இந்த கால எல்லைக்குள் 30 பில்லியன் டொலர்களை செலுத்தவேண்டும் என பொருளியல் ஆய்வாளர் ஏ. விஜயவர்த்தனா அல்ஜசீராவுக்கு தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற புனித ஞாயிறு தாக்குதல் மற்றும் கோவிட்-19 என்பன சிறீலங்காவின் பொருளாதாரத்தை அதிகம் பாதித்துள்ளன. தற்போதைய நிலையை அரசு தக்கவைக்கவேண்டும் எனில் வெளிநாடுகளில் இருந்து பணத்தை பெறவேண்டும்.
2005 ஆம் ஆண்டு மகிந்தா பதவியேற்ற பின்னர் ஆரம்பித்த இந்த பொருளாதார நெருக்கடியை சீனாவிடம் இருந்து அதிக வட்டிக்கு வாங்கிய பெருமளவான கடன்கள் மேலும் அதிகரித்துள்ளன. அது மைத்திரியின் காலத்தில் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் 50,000 பட்டதாரிகளுக்கும், குறைந்த வருமானமுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 100,000 பேருக்கும் வேலைவாய்ப்புக்களை அரசு நிறுவனங்களில் வழங்கப்போவதாக கோத்தபாயா தெரிவித்துள்ளது நிதி நிலமையை மேலும் மோசமாக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.