நிகழ்நிலை காப்புச் சட்டம் அரசின் மற்றொரு ஆயுதம் – அகிலன்

online bill நிகழ்நிலை காப்புச் சட்டம் அரசின் மற்றொரு ஆயுதம் - அகிலன்மூக ஊடகங்கள்தான் எப்போதும் மக்களின் குரலாக இருந்து வருகின்றது. மக்களின் கருத்துக்களை முழுமையாகப் பிரதபலிப்பதற்கு தேசிய ஊடகங்களால் முடிவதில்லை. அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவற்றின் இயலாமையிலிருந்துதான் சமூக ஊடகங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. மக்களின் உணா்வுகளை உள்ளக் கிடங்கைகளைப் பிரதிபலிப்பதாக சமூக ஊடகங்கள்தான் உள்ளன. அவ்வாறான சமூக ஊடகங்களை முடக்வதற்கு அரசாங்கம் முற்படுகிறது என்றால் அதனுடைய உண்மையான அா்த்தம் என்ன?

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரிரான் அலஸினால் கொண்டுவரப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. சமூக ஊடகங்களை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதுதான் இந்த சட்டமூலத்தின் நோக்கம். இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்ட நிலையில் 46 மேல் அதிக வாக்குகளால் சட்டம் மூலம் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றது.

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி மனித உரிமை அமைப்புகளும் சர்வதேச அமைப்புகள் பலவும் கூட இந்த சட்டம் மூலத்திற்கு எதிராகவே கருத்துக்களை முன்வைத்தன. ஊடக அமைப்புகள் இதற்கு எதிராக போராட்டங்களையும் நாடளாவிய ரீதியில் நடத்தியுள்ளன. அமெரிக்க துாதுவா் கூட, இதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை.

உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச ரீதியாகவும் இந்த சட்டமூலத்திற்கு எதிரான கருத்துக்கள் இருந்த போதிலும் இதனை எப்படியும் நிறைவேற்றி விட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாகவும் அவசரமாகவும் செயல்பட்டது. சமூக ஊடகங்கள் சில சயமங்களில் வரம்புமீறிச் செயற்படுகின்றன என்பது உண்மைதான். அதற்கு சில வரையறைகள் வழிகாட்டல்கள் இருக்க வேண்டும் என்பதும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உன்றுதான். அதற்காக கொடூரமான சடடங்களின் மூலமாக அவற்றை அரசின் இரும்புக் கரங்களுக்குள் கொண்டுவர நினைப்பது நிச்சயமாக மக்களின் உணா்வுகளை கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கான ஒரு முயற்சிதான்.

இந்த சட்டமூலத்தை அவசரப்பட்டு கொண்டுவர வேண்டாம் என எதிா்க்கட்சிகள் அனைத்துமே கோரிக்கை விடுத்திருந்தன. சம்பந்தப்பட்ட தரப்பினரின் நிபுணத்துவம் பெற்றவா்களின் ஆலோசனைகளுடன் இதனைக் கொண்டுவரலாம் அதற்கு அவகாசம் வேண்டும் என்பதுதான் அவா்களது நிலைப்பாடு. அந்தக் கோரிக்கைகள் தொடா்பில் கவனம் செலுத்தும் நிலையில் அரசாங்கம் இருக்கவில்லை. அவசர அவசரமாக அதனைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்பதில் அரசாங்கம் இந்த அளவுக்கு அக்கறையாக இருப்பதற்கு காரணம் என்ன என்பது புரியாத ஒன்றல்ல!

இந்த சட்டமூலத்தின் பெரும்பாலான பகுதிகள் அரசியல் அமைப்புக்கும் முரணாக இருப்பதாக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அவை திருத்தப்பட வேண்டியவையாக இருந்தன. தேவையான திருத்தங்களை செய்து அது தொடர்பான தொழில்நுட்ப அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து அது தொடா்பில் ஆராய்வதற்கான கால அவகாசத்தை வழங்காமல் இதனை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் அரசாங்கம் தீவிரமாக இருந்தது. இதனைத் தான் எதிர்க்கட்சிகள் கண்டித்திருந்தனர். இவ்விடயத்தில் எதிா்க்கட்சிகளின் கோரிக்கை நியாயமானதுதான்.

online 00 நிகழ்நிலை காப்புச் சட்டம் அரசின் மற்றொரு ஆயுதம் - அகிலன்
Sri Lankan social media activists hold placards with slogans against the proposed Online Safety Bill during a protest near the Parliament in Colombo, Sri Lanka, Tuesday, Jan. 23, 2024. (AP Photo/Eranga Jayawardena)

சமூக ஊடகங்கள் மூலமாக தவறான கருத்துக்கள் பரப்பப்படுகின்றது. தனிப்பட்டவா்களுடைய விடயங்கள் அவற்றின் மூலமாக வெளிப்படுத்தப்படுகின்றன என்பது போன்ற கருத்துக்களை முன்வைத்து இந்த சட்டமூலத்தை அரசாங்கம் நியாயப்படுத்தியது. ஆனால் அரசாங்கம் இந்த சட்டமூலத்தை கொண்டு வருவதில் காட்டிய அவசரம் உண்மையிலேயே அரசாங்கம் சொல்லும் நோக்கம் உண்மையானதா என்பதை கேள்விக்குறியாக்கியுள்ளது.

உயர் நீதிமன்றம் குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு, அவை தொடர்பான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உரிய முறையில் ஆராயப்பட்டு அதன் பின்னர் நிதானமாக இதனை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்திருந்தால் அரசாங்கத்தின் நோக்கம் நேர்மையானது என்று கருதலாம்.

ஆனால், அவ்வாறு உரிய தரப்புக்களுடன் எந்த ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ளாமல் அவசரமாக இந்த சட்டமூலத்தை அரசாங்கம் கொண்டு வந்திருப்பது சமூக ஊடகங்களுக்கு வாய்ப்பூட்டு போடுவதற்கான ஒரு உபாயம் என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாகவே இருக்கின்றது.

இந்த சட்டம் மூலம் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தேர்தல் நடக்க உள்ள நிலைமையில் அதன் தாக்கம் மிகவும் மோசமானதாக இருக்கலாம் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டி இருந்தது. தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் மீது விமர்சனங்களை வெளிப்படுத்துவதற்கு சமூக ஊடகங்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. பொதுமக்களிடையேயான கலந்துரையாடல், கருத்துப் பரிமாற்றங்களுக்கான களமாகவும் அவைதான் இருக்கின்றன. தேர்தலின் போது இடம் பெறக்கூடிய வாக்களிப்புகளில் அதன் தாக்கமும் அதிகமாக இருக்கலாம்.

தோ்தல்களை எதிா்கொள்ளும் நிலையில், இவ்வாறன ஒரு சட்டமூலம் அவசியம் என அரசாங்கம் கருதுவது இதனை அவசரமாகக் கொண்டுவந்தமைக்கு முதலாவது காரணம்.

இதனை விட இந்த சட்டமூலத்தை அவசரமாகக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முற்பட்டமைக்கு மற்றொரு காரணமும் உள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சிங்கள இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கும் சமூக ஊடகங்கள் தான் தூண்டுகோலாக அமைந்திருந்தன. அவற்றின் மூலமாகவே கருத்துக்கள் பரப்பப்பட்டன. போராட்டத்திற்கான அழைப்புக்கள் விடுக்கப்பட்டன.

தற்போதைய நிலைமையில் விலைவாசி உயர்வு, அத்திய அவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்றன அதிகரித்துச் செல்லும் நிலை காணப்படுகின்றது. இது மீண்டும் ஒரு “அரகலிய” போன்ற போராட்டத்தை தென்பகுதியில் உருவாக்கி விடுமா என்ற அச்சம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. ஏற்கனவே, பல்வேறு தரப்பினரும் தினசரி போராட்டங்களை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றாா்கள். அவ்வாறான போராட்டங்கள் சமூக ஊடகங்கள் மூலமாகவே ஒருங்கிணைக்கப்படுகின்றன. எனவே அவற்றை கட்டுப்படுத்துவதன் மூலமாகவே அரசுக்கு எதிராக உருவாகக் கூடிய போராட்டங்களைத் தடுக்க முடியும் என்பதும் அரசாங்கத்தின் கணிப்பு.

இந்த சட்டமூலத்தை அவசரமாகக் கொண்டுவந்து நிறைவேற்றியமைக்கு இது இது இரண்டாவது காரணம்.

இதற்கு மேலாக “அரகலய” போராட்டம் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவே உருவானது. அதில் கோட்டாபயவும், மகிந்தவும் பதவிகளை இழந்தாா்கள். அவ்வாறிருந்தாலும் பாராளுமன்றப் பலத்தின் மூலமாக ஜனாதிபதி ரணிலை தமது பிடிக்குள் வைத்திருக்கக்கூடிய பலத்துடன்தான் ராஜபக்ஷக்கள் இன்னும் இருக்கின்றாா்கள். ராஜபக்ஷக்களுக்கு எதிராக உணா்வலைகள் இன்னும் ஓயவில்லை. நீறுபுத்த நெருப்பாக அது உள்ளது. ஏதாவது ஒரு சந்தா்ப்பத்தில் வெடிக்கலாம். அது ஜனாதிபதிப் பதவியில் இருக்கும் ரணிலையும் பாதிக்கும். அதனைக் கட்டுப்படுத்துவதற்கும் இவ்வாறான ஒரு சட்டமூலம் அவசியம்.

ராஜபக்ஷக்களின் பொதுஜன பெரமுனையின் ஆதரவுடன் இந்த சட்டமூலத்தைக் கொண்டுவந்து நிறைவேற்ற ரணில் தீா்மானித்தமைக்கு இது மூன்றாவது காரணம்!

அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இவ்வருடத்தில் வரப்போகும் தேர்தல்கள், மற்றும் உருவாகக்கூடிய போராட்டங்கள் என்பவற்றை கருத்தில் கொண்டு தான் அவசரமாக இந்த நிகழ்நிலை காப்புச் சட்டத்தை கொண்டு வந்திருக்கின்றது.

தேர்தல் தருணத்தில் எதிர்க்கட்சிகளின் பிரசார உத்திகளை கூட இந்த சட்டம் மூலம் பாதிக்கும் என்பதால் இதற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எதிா்க் கட்சிகள் எடுத்திருந்தன. திருத்தங்கள் பலவற்றையும் அவா்கள் முன்வைத்திருந்தனர். எது அப்படி இருந்தாலும் பாராளுமன்றத்தில் ராஜபக்ஷக்களின் கட்சியின் ஆதரவுடன் இந்த சட்டமூலத்தை இலகுவாக நிறைவேற்ற முடிந்தது.

தமிழ்த் தரப்பினா் முன்னெடுக்கக்கூடிய போராட்டங்களையும் இது வெகுவாகப் பாதிக்கத்தான் போகின்றது. இவை அனைத்தையும் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தற்போது கைகளில் எடுத்துள்ள ஆயுதம்தான் இந்த “நிகழ்நிலை காப்புச் சட்டம்”!