மலையக மக்கள் தொடர்பாக இன்று பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள் என்ற கருத்தை முன்வைக்கின்றனர். அதனை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் மலையக இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற அடையாளத்தை என்றும் விட்டுக் கொடுக்க முடியதென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘ஒரு சிலருடைய கருத்துக்கள் மிகவும் விதண்டாவாதமாகவும் குதர்க்கமாகவும் இருக்கின்றது. மலையக மக்களுக்கு பிரச்சினைகள் இல்லை என்பதுபோல பேசுகின்றனர். இது மிகவும் தவறான ஒரு விடயமாகும். எங்களுடைய வரலாற்றை நான்றாக தெரிந்து கொண்டு நாம் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
மலையக இந்திய வம்சாவளி தமிழர்கள் என்றுமே தங்களுடைய அடையாளத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.குறிப்பாக இன்றைய இளைஞர்கள் அனைவரும் மலையக இளைஞர்கள் என்று சொல்லிக் கொள்வதில் அவர்கள் பெருமை கொள்கின்றனர். அது எங்களுடைய அடையாளம்.
இந்த நாட்டிலே நான்கு சமூகங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சிங்களவர்கள், வடக்கு,கிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் இந்த நாட்டில் இலங்கைரென்ற ரீதியில் தங்களுடைய அடையாளத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
சிங்களவர் வெளிநாடுகளுக்கு சென்றால் தங்களை இலங்கையர்கள் என்று குறிப்பிடுகின்றனர்.வடக்கு,கிழக்கு மக்கள் தங்களை இலங்கையின் வடக்கு,கிழக்கு தமிழர் என்று கூறுகின்றனர்.
அதேபோல மலையக தமிழர்கள் நாங்கள் இலங்கையர் மலையக இந்திய வமசாவளி தமிழர் என்றே குறிப்பிடுகின்றனர். அது எங்களுடைய அடையாளம் அதனை நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது.
அண்மையில் இங்கிலாந்தின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட ரிஷி சுனக் அவரை இந்திய வம்சாவளியினர் என்றே குறிப்பிடுகின்றனர். அவரும் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டவுடன் இந்து ஆலயத்துக்குச் சென்றே முதலில் வழிபட்டார்.அதற்கு காரணம் அவர் தன்னுடைய மதம், கலை கலாசாரம் என்பவற்றை விட்டுக் கொடுக்கவில்லை. ஏனெனில் அவருக்கு பெருமை அதுதான்.
அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஒரு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், அவரும் அதனை கூறியிருக்கின்றார். அது அவருடைய அடையாளம். அதேபோல் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா ஒரு ஆபிரிக்க பரம்பரையில் வந்தவர். அவரும் அதனை மறைக்கவில்லை.ஏனென்றால் எங்களுடைய அடையாளத்தை நாங்கள் மறைக்க முடியாது.
இப்படி அனைவருமே தங்களுடைய அடையாளத்தை விட்டுக் கொடுத்தவர்களல்ல. இலங்கையின் எல்லாத் துறைகளிலும் பல உச்சங்களை தொட்டவர்கள் மலையக சமூகத்தில் இருக்கின்றார்கள். குறிப்பாக மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான், அமரர் அசீஸ், ஜெயா பெரிசுந்தரம், கோ.நடேசய்யர் என இன்னும் பலரை குறிப்பிடலாம். அதே போல இன்று கொழும்பில் வர்த்தக துறையில் கொடிகட்டி பறக்கின்ற பலர் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவருமே தங்களை மலையக இந்திய வம்சாவளி தமிழர் என்றே குறிப்பிடுகின்றார்கள்’ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.