புற்றுநோய் செல்களை அழிக்கும் ஊட்டச்சத்து மருந்து இலங்கையில் கண்டுபிடிப்பு

புற்றுநோய் செல்களை அழிக்கும் ஊட்டச்சத்து மருந்து இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்து மூலம் 2027 ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்கு சுமார் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டமுடியும் என எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் சமீரா ஆர். சமரகோன் தெரிவித்தார்.

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கொடிய நோய்களில் ஒன்றான புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்திவருகின்றது.

இவ்வாறான சூழலில், கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம், புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது.

மனித உடலின் ஒரு பகுதியில் அசாதாரண செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியே புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. இது ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், மரணத்தைக்கூட ஏற்படுத்தக்கூடியது.

உலகளவில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 மில்லியன் மக்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர். இலங்கையில், ஆண்டுதோறும் புற்றுநோயால் இறக்கும் மக்களின் எண்ணிக்கை 15,000 முதல் 20,000 வரை காணப்படுகிறது.

இந்த அபாயகரமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, உலகளவில் புற்றுநோய் பரவல் விரைவாக அதிகரித்து வரும் நிலையில், அதை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியம் மீது உலகின் கவனம் குவிந்துள்ளது.

இந்தச் சூழலில், 2008 ஆம் ஆண்டு முதல் சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட தொடர்ச்சியான ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (I-BMBB) புற்றுநோய் செல்களைக் கொல்லக்கூடிய இந்த ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.

புற்றுநோய் செல்களைக் கொல்லும் இந்த ஊட்டச்சத்து மருந்து, மூலக்கூறு உயிரியல் (Molecular Biology) மற்றும் நெட்வொர்க் மருந்தியல் (Network Pharmacology) போன்ற மிகவும் நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி, ஐந்து பாரம்பரிய மருத்துவத் தாவரங்களின் கலவையைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்த பேராசிரியர் சமீரா ஆர். சமரக்கோன் உள்ளிட்ட குழுவினர், குறித்த ஐந்து தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மருந்துகளின் கலவையானது புற்றுநோய் செல்களைத் திறம்பட அழிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்ட மருத்துவத் தாவரங்கள் பின்வருமாறு:

1.  Vernonia zeylanica

2.  Nigella sativa

3.  Hemidesmus indicus

4.  Leucas zeylanica

5.  Smilax glabra

இந்தக் கண்டுபிடிப்பு, இலங்கையின் மருத்துவத் துறையிலும், உலகளாவிய புற்றுநோய் சிகிச்சைகளிலும் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.