இறைமையைத் தவிர்க்கும் (Not evasion) காலமல்ல உறுதிப்படுத்த வேண்டிய (But decision) நேரம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 354

கடந்த வாரத்தில். பிரான்ஸ்-பிரித்தானியா-யேர்மன் அரசதலைவர்கள் இணைந்து முக்கூட்டு தடையினை ஈரானுக்கு விதித்தனர். பிரான்சின் அரசத்தலைவர் மக்ரோனும் யேர்மனின் அரசத்தலைவர் மெர்கலும் இணைந்து இருநாட்டு அமைச்சர்களையும் ஒரே அவையாக அமைத்து அமைச்சரவையினை நடாத்தினர். இவ்வாறான புதிய செல்நெறிகள் உலக அரசியலில் தோற்றம் பெறுவதற்கு மூலகாரணமாக உள்ளது அந்த அந்த நாட்டின் பாதுகாப்பும் நாடுகள் உள்ள கண்டத்தின் பாதுகாப்பும் என்பதாக அமைகிறது. இன்றைய உலகு பாதுகாப்புக்கும் சந்தைக்குமாக கூட்டாண்மைகளையும் பங்காண்மைகளும் கொண்டதாக அரசியலை முன்நகர்த்தினாலும் இறைமை என்பதும் தன்னாட்சி என்பதும் பேரத்துக்கு உட்படுத்த இயலாதனவாகவே ஒவ்வொரு நாட்டிலும் உள்ளது என்பது கவனத்திற்குரியவொன்றாக உள்ளது. இதன் வழி சமகாலம் இறைமையைத் தவிர்க்கும் காலமல்ல (Not evasion)இறைமையை உறுதிப்படுத்த வேண்டிய நேரமாக (But decision) உலகின் தேசமக்கள் ஒவ்வொருவருக்கும் அமைகிறது என்பது முக்கியமான விடயம்.
அதிலும் ஈழத்தமிழர்கள் போன்ற உலகின் சிறுதேச இனங்கள்(Small Nation)காலனித்துவத்துக்கு பல நூற்றாண்டுகள் உள்ளாகியதன் விளைவாக தங்களின் அரசாக காலனித்துவ ஆட்சியாளர்களையும் அவர்கள்  திணித்த சமகால அரசாங்கங்களின் படைபல ஆக்கிரமிப்பு ஆட்சியினையும்  எதிர்த்து தங்களுடைய இறைமையின் அடிப்படையில் தங்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளின் வழி தங்களின் அரசியல் எதிர்காலத்தை அமைக்க இயலாமையுள்ளவர்களாக இனஅழிப்பு இனத்துடைப்பு பண்பாட்டு இனஅழிப்புக்கு ஆளாகி தங்களின் இறைமை ஒடுக்கத்தையும் தன்னாட்சி இழப்பையும் தங்களின் நாளாந்த வாழ்வாக அனுபவிக்க வேண்டியவர்களாக உள்ளனர். இதற்கு ஈழத்தமிழர்களும் பலஸ்தீனியர்களும் கண்முன்நிற்கும் உதாரணமாக உலகில் விளங்குகின்றனர்.
இந்நிலையில் நாடுகளல்ல, அமைப்புக்கள் அல்ல மக்களே தங்களின் இறைமையைத் தாங்களே மீளுறுதி செய்ய வேண்டியவர்களாகின்றர்கள். சனநாயக வழிகளில் ஈழத்தமிழர்கள் பிரித்தானிய காலனித்துவ அரசு எம்மிடம் இருந்து கைப்பற்றிய யாழ்ப்பாணம்-வன்னி அரசுகளுக்கு உரிய இலங்கையின் வடக்கு கிழக்கு நிலப்பகுதிகளான  இந்த மண் எங்களின் சொந்த மண் என்னும் இறைமையை உறுதியின் உறைவிடமாக நின்று மீளுறுதிப்படுத்தி விழ விழ எழுவோம் என்னும் தளரா முயற்சியால் தன்னாட்சியினை மீள்உற்பத்தி செய்வதன் வழி மட்டும்தான்  தங்களுக்கான பாதுகாப்பான அமைதியையும் வளர்ச்சிகளையும் சமகாலத்தில் மீளுருவாக்கம் செய்ய முடியும் என்பது இலக்கின் எண்ணமாக உள்ளது. வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் இலங்கையின் வடக்கு கிழக்கில் வாழ்ந்து வரும் ஈழத்தமிழர்கள் தங்களின் இறைமையை மீளுறுதி செய்ய முயற்சிப்பது எந்த வகையில் பிரிவினையாகும். ஈழத்தமிழர் தங்களின் வரலாற்றுத் தாயகத்தில் தங்களின் தேசியத்தை தங்களின் தன்னாட்சி வழி வளர்த்து தங்களுக்கான பாதுகாப்பான அமைதியான வாழ்வை வளர்ச்சிகளை அமைக்க முயல்வது எந்த வகையில் பயங்கரவாத நடவடிக்கையாகிறது. இந்தக் கேள்விகள் அனைத்துலக மக்கள் மத்தியில் எழுப்பப்படாததே உலகின் மௌன நிலைக்குக் காரணம் என்பது இலக்கின் உறுதியான கருத்தாகவுள்ளது. அதாவது ஒவ்வொரு உன்னதத்தையும் உழைப்பால்தான் உச்சப்படுத்த முடியும். உழைப்பிற்கு செயலணி தேவை. சமூகத்தில் நாங்கள் என்ற உள்ளுணர்வு எங்கள் என்ற உரிமை உணர்வாக மாறாவிட்டால் தாயகம் காப்பது கடமை என்பது வாழ்வாகாது. இன்று ஈழத்தமிழர்களிடை “நாங்கள்” என்ற உள்ளுணர்வு, “எங்கள்” என்ற உரிமை உணர்வுகளை சீரழிக்கும் செயல்கள் எல்லையற்றனவாக வளர்கின்றன. சமூக ஊடகங்கள் இதனை ஊதிப்பெருப்பிக்கின்றன.
15.01. 1946 இல் அகில இலங்கை தமிழ்க்காங்கிரசின் இணைச்செயலாளர் எஸ். சிவசுப்பிரமணியம் அவர்கள் அக்கால பிரித்தானிய பிரதமராக இருந்த லேபர்கட்சித்தலைவர் அட்லி அவர்களுக்கு அனுப்பிய “முன்மொழியப்பட்டுள்ள சிலோன் அரசியலமைப்பு குறித்த அகில இலங்கை தமிழ்க்காங்கிரசின் கடிதத்தில்” (339 Co 54/986/9/1, no.9. British Documents on the End of Empire, Series B Volume 2-Sri Lanka Editor K.M.De Silva-Part Towards Independence 1945-1948 page 178)  மிகத்தெளிவாக எடுத்து விளக்கி சோல்பரி அரசியலமைப்பை இலங்கை தமிழர்கள் நிராகரிப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார். எனவே 79 ஆண்டுகளாக ஈழத்தமிழர்களால் நிராகரிக்கப்பட்டு வரும் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சி பாராளுமன்ற முறைமையின் கீழேயே தங்களுக்கு அரசியல் அதிகாரப்பரவலாக்கத்தை இன்றைய ஈழத்தமிழ்ச் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்பதே இன்றும் ஈழத்தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கான அனைத்துலக சட்ட அடிப்படையிலான தீர்வுகளோ பாதுகாப்போ எதுவுமே கிடைக்காதிருப்பதற்கான மூலகாரணம் என்பதை ஐக்கியநாடுகள் சபை தொடக்கம் பெற்ற இரண்டாவது ஆண்டில் எழுதப்பட்ட இந்தக் கடிதம் தெளிவாக எடுத்து விளக்குகிறது. இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் இந்த செப்டெம்பர் மாத  60வது ஆண்டமர்வில் கூட ஈழத்தமிழர்கள் மேலான சிறிலங்காவின் யுத்தக்குற்றச் செயல்கள், மனிதாயத்துக்கு எதிரான குற்றங்கள், மனித உரிமைகள் வன்முறைப்படுத்தல்கள் எதற்குமே குற்றம் இழைத்தவர்களுக்கான தண்டனை நீதியோ அல்லது ஈழத்தமிழர்களுக்கான பரிகாரநீதியோ எதுவும் கிடைக்கப்போவதில்லை. அதற்கு மாறாக சிறிலங்கா அரசாங்கத்தை உறுதியான அரசாக மாற்றுவதற்கான நெறிப்படுத்தல்களும் மதிநிதி ஆதரவுகளுமே அதிகரிக்கப்படும். ஏனெனில் ஐக்கிய நாடுகளின் வல்லாண்மை நாடுகளுக்கும் பிராந்திய மேலாண்மை நாட்டுக்கும் சிறிலங்காவுடனான தங்களின் கூட்டாண்மை பங்காண்மை தொடர்பாடல்களும் உறவாடல்களுமே இன்றைய தேவையாக உள்ளன.
இன்றைய உலகில் அரசாங்கங்கள் எத்தகைய வேறுபாடான சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக அல்லது தத்துவக் கொள்கைகளைக் கொண்டனவாக இருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தாது ஒரு பொது விருப்பில் தங்களிடம் உள்ள மாறுபாடுகள் வேறுபாடுகளைக் கடந்து இணைந்து அந்த பொதுவிருப்பை நடைமுறையாக்க முன்வைத்ததை “விருப்பாளர்களின் இணைவு” என்ற புதுவகைக் கூட்டாண்மை பங்காண் மையை இன்றைய பிரித்தானியப் பிரதமர் கெயர் ஸ்ராமர் , உக்ரேனுக்கான ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு என்னும் பொதுநோக்கில் தொடக்கி வைத்தமை உலகறிந்த விடயம். இந்நிலையில் அரசைக் கொண்டிராத நிலையில் உள்ள சிறுதேச இனங்கள் தங்களுக்கான பாதுகாப்பை தங்கள் மக்களின் அறிவுப்பலம் தங்கள் மண்ணின் இயற்கை வளம் இவற்றினை உற்பத்தியாக்க வல்ல தொழில்நுட்பப் பலமும் மூலதனமும் ஏற்படத்தக்க வகையில் உலகளாவிய ஈழத்தமிழினத்தின் வழியாகக் கட்டியெழுப்ப வேண்டுமென்பதே இலக்கின் கருத்து அதே போன்று இன்று ஐரோப்பிய இராணுவம் என்னும் ஒன்றின் கட்டமைப்பு முயற்சியை பிரான்சு முன்னெடுக்கத் தொடங்கியதன் வழி கண்டங்களின் அரசியல் வேகம் பெற்று வருகிறது. ட்ரம்பின் வர்த்தகப் போட்டி வேறு கண்ட அரசியலை காலத்தின் தேவையாக்குகிறது. இதுவே இந்திய சீன நட்பு என்னும் புதிய அரசியல் தோற்றம். ஆதலால் அரசியல் ராஜதந்திரமிக்க செயற்பாடுகள் வழியாகவே ஈழத்தமிழர்கள் புதிய உலக அரசியல் ஒழுங்கை எதிர்கொள்ள வேண்டிய காலமிது என்பது இலக்கின் மற்றொரு கருத்து.
இந்நிலையில் ஈழத்தமிழர்கள் இருப்பனவற்றை இருப்பனவாகவே செயற்பட அனுமதித்து தங்களின் சமுக பொருளாதார அரசியல் ஆன்மிக தேவைகளுக்கான மக்கள் செயலணிகளை சிறு சிறு குழுமங்களாகச் சுயாதீனமாகக் கட்டியெழுப்புவதன் மூலமே மீளவும் தேசநிர்மாணத்தை உறுதியாகவும் அறிவுபூர்வமாகவும் அனைத்துலக இணைப்புடனும் கட்டியெழுப்பலாம் என்பதே இலக்கின் இவ்வாரக் கருத்தாக உள்ளது.

Tamil News