வடக்கு கிழக்கு ஹர்த்தால் தோல்வியில் நிறைவு

இலங்கை தமிழரசுக் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்டதற்கு அமைய, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒரு சில பகுதிகளில் இன்றைய தினம் அரை நாள் ஹர்த்தால் என்ற நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இன்றைய தினம் முழுவதும் நிர்வாக போராட்டத்திற்கு முன்னதாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது
எனினும் இன்று முற்பகல் வேளையில் மாத்திரம் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றிரவு அறிவித்தார்.
பலரின் நன்மை கருதி இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்
எவ்வாறாயினும் இன்றைய தினம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் வழமைபோலவே தமது நாளாந்த செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கண்டித்து இந்த நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அதற்கமைய, சில பகுதிகளில் மாத்திரம் வர்த்தக நிலையங்கள் சில மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் பொது போக்குவரத்து என்பன வழமைபேலவே இயங்கின. இந்தநிலையில், கிழக்கு மாகாணத்தின், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் சில வர்த்தக நிலையங்கள் மூடப்பட்ட போதிலும், பெரும்பாலான செயற்பாடுகள் வழமைப்போன்றும் முன்னெடுக்கப்பட்டன.