நவ-20 அழைப்பை மீளப்பெற வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஆயர் பேரவையுடன் #P2P இயக்கத்தினர் சந்திப்பு

நவ-20 அழைப்பை மீளப்பெற வலியுறுத்தி

நவம்பர்-20 ஆம் திகதி போரில் இறந்தோர் நினைவுகூரலுக்கு வடக்கு கிழக்கு ஆயர் பேரவையின் விடுத்த அழைப்பை மீளப்பெற வலியுறுத்தி P2P மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினர் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பில் P2P மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினர் விடுத்துள்ள அறிக்கையில்,

‘போரினால் இறந்தோர் நினைவு தொடர்பான வடக்கு கிழக்கு ஆயர்களுடனான சந்திப்பு மேற்படி விடயம் தொடர்பாக அண்மையில் வடக்கு கிழக்கு ஆயர்கள் பேரவையினால் வெளியிடப்பட்ட போரினால் இறந்தோர் நினைவு எனும் தலைப்பிலான அறிக்கை பல தரப்பினருக்கு அதிருப்தியையும், கவலையையும் தமிழ்த் தேசியத்தின் பால் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு கிழக்கு சிவில் சமூகங்களாக இவ்விடயம் தொடர்பாக நடைபெற்ற பல்வேறுபட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில், சிவகுரு ஆதீன முதல்வரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளருமான தவத்திரு வேலன் சுவாமிகள் அவர்களும், கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் இணைப்பாளரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளருமான திரு.ச.சிவயோகநாதன் அவர்களும், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய ஜோசப் பொன்னையா ஆண்டகை அவர்களையும், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய நோயல் இமானுவேல் ஆண்டகை அவர்களையும், யாழ் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களையும், மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களையும் சந்தித்து, மேற்படி விடயம் தொடர்பாக கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடலில் மாவீரர் பெற்றோர்களினதும், தமிழ் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட பல்வேறு தரப்பினரதும் ஆதங்கங்கள், கவலைகள் மற்றும் கருத்துக்கள் என்பன ஆயர்களிடம் எடுத்துரைக்கப்பட்டன.

நவ-20 அழைப்பை மீளப்பெற வலியுறுத்தி நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது, ஆயர்கள் பேரவையால் அறிவிக்கப்பட்டிருந்த போரினால் இறந்தோர் நினைவு கூரலை குறிப்பிட்டிருந்த 20.11.2021 அழைப்பை மீளப் பெற்றுக் கொள்ளுமாறு வடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad நவ-20 அழைப்பை மீளப்பெற வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஆயர் பேரவையுடன் #P2P இயக்கத்தினர் சந்திப்பு