நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதற்கும், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் அரசாங்கம் எவ்வித ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
புதிய யாப்பு உருவாக்கத்துக்கான எண்ணக்கரு பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டது இன்றளவில் வெறும் அறிவிப்பாகவே காணப்படுகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளை விரைவுப்படுத்தி ஆட்சிக்கு வந்தவுடன் புதிய யாப்பினை உருவாக்குவதாக தேசிய மக்கள் சக்தி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிக்கு வந்து ஒருவருடம் நிறைவடைந்துள்ளது. ஆனால் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றியோ அல்லது நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கம் பற்றியோ பாராளுமன்றத்திலோ அல்லது பொது இடங்களிலோ ஏதும் குறிப்பிடவில்லை என்று அவர் சாடியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி பதவியின் மோகத்துக்கு ஜனாதிபதியும் அடிபணிந்து விட்டார் என்றே தோன்றுகிறது. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும், மாகாணசபை முறைமை பலப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் நடைமுறையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஒட்டுமொத்த மக்களின் அபிலாசைகளையும் கோரி புதிய யாப்பினை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஓரிரு மாதங்களில் அரசியலமைப்பை உருவாக்க முடியாது. அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் வெளிப்படையான பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். நடைமுறையில் உள்ள அரசியலமைப்பில் பல குறைப்பாடுகளில் காணப்படுகிறது. ஆகவே புதிய யாப்பினை உருவாக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் வெளிப்படையாக முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியில் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.



