அத்தியாவசிய தேவைகள் இல்லாத எவரும் கடவுச்சீட்டைப் பெற வேண்டாம்: அமைச்சர் விஜித ஹேரத்

அத்தியாவசிய தேவைகள் இல்லாத எவரும் கடவுச்சீட்டை பெற வரவேண்டாம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  வலியுறுத்தியுள்ளார்.  கடந்த வாரம் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் 40ஆயிரம் கடவுச்சீட்டுகளை அரசாங்கம் இரண்டு கட்டங்களாக இறக்குமதி செய்துள்ளது.

அதன் பிரகாரம் ஏற்கனவே, பதிவுசெய்யப்பட்டு நிலுவையில் உள்ளவர்களுக்கு கடவுச்சீட்கள் தறடபோது வழங்கப்பட்டு வருகின்றன. என்றாலும், குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தில் தொடர்ந்து அதிகளவான மக்கள் வருவதால் வரிசைகள் இன்னமும் முடிவடையவில்லை.

இதுதொடர்பில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், ”கடந்த காலங்களில் கடவுச்சீட்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டுக்கான தேவை அதிகரித்துள்ளது. புதிய முறையின் கீழ் அத்தியாவசியமான அனைத்து நபர்களுக்கும் கடவுச்சீட்டு வழங்கப்படும்.

குறிப்பிட்ட அளவான கடவுச்சீட்டுகள் கையிருப்பில் உள்ளன. எதிர்காலத்தில் சில இலட்சம் கடவுச்சீட்டுகள் பெறப்படும். இதனால் அத்தியாவசிய தேவையுடையவர்கள் மாத்திரம் இக்காலப்பகுதியில் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாடு செல்லாதவர்கள் பெற வேண்டாம்.” எனவும் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்துள்ளார்.