‘இலங்கையில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை: பாராளுமன்றில் ஜனாதிபதி உரை

10ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு தற்போது ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது.

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சத்தியபிரமாணத்தை தொடர்ந்து ஜனாதிபதியின் கொள்கை விளக்க  உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க,

அனைத்து இன மக்களும் எம்மீது நம்பிக்கை கொண்டு அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள். அனைவருக்கும் நன்றி. தேர்தலில் ஆதரவளித்த, ஆதரவளிக்காத அனைவரையும் இலங்கை பிரஜைகள் என்றே நான் கருதுவேன். தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை.

மக்களால் வெறுக்கப்படும் பாராளுமன்றம் மக்களை ஆள்வதற்கு தகுதியற்றது. ஆகவே மக்களால் விமர்சிக்கப்படும் பாராளுமன்றம் தோற்றம் பெற இடமளிக்க முடியாது.

பாராளுமன்றம் மக்களுடன் நெருக்கமாக செயற்பட வேண்டும்.  இந்த பாராளுமன்றம் மக்களின் பரிசோதனையில் சித்தி பெற வேண்டும்.  ஜனாதிபதி உட்பட அனைவரும் நாட்டின் சட்டத்துக்கு அடிபணிய வேண்டும்’ என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய குற்றங்களை முறையாக விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்போம்.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துடன் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.  சர்வதேச நாணய நிதியத்துடனான பணியாளர் மட்ட இணக்கப்பாட்டு ஒப்பந்தம் சனிக்கிழமை (23) கைச்சாத்திடப்படும்.

இரு தரப்பு கடன் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பிரதான கடன் வழங்குநர் நாடுகளுடன் பிரத்தியேக ஒப்பந்தம் வெகுவிரைவில் கைச்சாத்திடப்படும். நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தை இந்த ஆண்டுக்குள் பூரணப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

‘Clean Sri Lanka’ கருத்திட்டத்துக்காக விசேட ஜனாதிபதி செயலணி அமைக்கப்படும்.  சிறந்த மாற்றத்துக்கு அரசியல் கட்டமைப்பு மாற்றமடைவதைப் போன்று, சமூக கட்டமைப்பும் மாற்றம் பெற வேண்டும்.  வறுமை நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக விசேட கொடுப்பனவு வழங்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

 

வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக அரச சேவையாளர்களின் வேதனம் அதிகரிக்கப்படும்.  குறை நிரப்பு பிரேரணை எதிர்வரும் மாதம் சமர்பிக்கப்படும்.2025 வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் சமர்பிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.