கல்வி மறுசீரமைப்புகளின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட தரம் 6க்கான ஆங்கிலப் பாடத் தொகுப்பில் உள்ள குறைபாடுகளைக் கண்டித்து, கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இது குறித்த முக்கிய விபரங்களை எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க வெளியிட்டுள்ளார். அதன்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திடும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூடி, பிரேரணையில் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது, பிரதமருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுப்பது குறித்து இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட தரம் 6க்கான ஆங்கிலப் பாடத் தொகுப்பில் சர்ச்சைக்குரிய அல்லது தவறான இணையத்தள முகவரி உள்ளடக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டே இந்த நகர்வுக்கு முக்கிய காரணமாகும். கல்வி அமைச்சராகவும் பதவி வகிக்கும் பிரதமர், இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.



