விரைவில் மாகாண சபை தேர்தலுக்கு வாய்ப்பில்லை : சுரேஷ் பிரேமச்சந்திரன்

மாகாணத்தின் அதிகாரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றால் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்று ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகபேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான  சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணய விடயத்தினைக் காண்பித்து அரசாங்கம் இழுத்தடிப்பு செய்யக்கூடாதென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்‌. மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக அரசாங்கம் மாறுபட்ட கருத்துக்களை கூறிவருகின்றது.
மாகாணசபைத் தேர்தலை அடுத்தவருடம் வைக்கவுள்ளதாக ஒருபக்கம் கூறுகிறது.
மறுபக்கத்தில்  எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை இறுதியாக்கப்பட்டு புதிய முறையில் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக கூறுகின்றது.

பாராளுமன்றில் எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது தற்போதைய ஆட்சியாளர்களும் சேர்ந்து தான் அன்று எதிர்த்தார்கள் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்
தற்போது தேர்தலை வைப்பதாயின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணையை நிறைவேற்றுவதன் ஊடாக பழைய முறையில் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஆட்சியில் உள்ள அரசாங்கம் அதனை நிறைவேற்றுவதற்கு  தயாராக இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வருடம் தேர்தலை வைப்பதாக இருந்தால், பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான பாராளுமன்ற அனுமதி தேவையாக உள்ளது.  அவ்வாறு இல்லாமல் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யவேண்டுமென்றால் அதற்கு பல வருடங்களாகும்.  ஆகவே தேர்தலுக்கு உடனடியான சாத்தியமில்லை. அந்த வகையில் அரசாங்கம் உண்மையாக என்ன செய்ய போகிறது என்பதை கூறவேண்டும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.