அரசியலுக்காகவே தமிழ், முஸ்லிம் மக்கள் பிரிக்கப்பட்டதாக நிசாம் காரியப்பர் தெரிவிப்பு

அரசியலுக்காகவும் வாக்குகளுக்காகவும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே துவேசத்தை ஒருசிலர் உண்டு பண்ணியதாக பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

தங்களுடைய இனத்தை முன்வைத்துக் கொண்டு மற்றைய இனத்தால் தமது இனத்துக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்படும் என்ற தோற்றப்பாட்டை அரசியல்வாதிகள் பெரிதாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த நிலைகளை மாற்றும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் கூறினார்.

இதேவேளை, முஸ்லிம்களுக்காக கடந்த காலங்களில் குரல் கொடுத்த கட்சி இலங்கை தமிழரசுக் கட்சி என்றும் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார். மறைந்த மூத்த தலைவர்களான அஷ்ரப் மற்றும் அமிர்தலிங்கம் ஆகியோர் ஒன்றிணைந்து தமிழர்களுக்காக போராடியவர்கள் என்றும் அவர் இதன்போது நினைவுபடுத்தியுள்ளார்.

வட, கிழக்கில் உள்ள தமிழர்களும் முஸ்லிம்களும் சுயாட்சியை விரும்புவதை அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தமக்கு ஞாபகப்படுத்தியிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் முஸ்லிம்களும் தமிழர்களும் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் வாழ வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் குறிப்பிட்டுள்ளார்.