புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள் மற்றும் சேவைகள் தொடர்பான வழிகாட்டுதல் ஆவணம் ஒன்று சகல அமைச்சுக்களினதும் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளரினால் குறித்த ஆவணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான உதவி பணியாளர்களின் எண்ணிக்கையில் அரசாங்கம் ஒரு உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது.
இதற்கமைய, அமைச்சர் ஒருவருக்கு அதிகபட்சமாக 15 உதவி பணியாளர்கள் மாத்திரமே நியமிக்கப்படுவார்கள். அத்துடன் பிரதி அமைச்சர் ஒருவருக்கு 12 உதவி பணியாளர்கள் மாத்திரம் நியமிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் தங்கள் கடமைகளை திறம்படச் செய்வதற்கும், அமைச்சுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைப்பதற்கும் உதவி பணியாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் அமைச்சுகளுக்கு ஆலோசகர்களை நியமிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான அதிகாரப்பூர்வ வாகனங்கள், அவற்றுக்கான எரிபொருள் ஒதுக்கீடுகள் மற்றும் தொலைபேசி செலவுகள் என்பன தொடர்பான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு அதிகபட்சமாக இரண்டு உத்தியோகப்பூர்வ வாகனங்கள் மட்டுமே ஒதுக்கப்படும்.
வாடகை அல்லது பிற வழிகளில் பெறப்பட்ட எந்தவொரு வாகனங்களையும் நிர்வகிக்கும் பொறுப்பு அமைச்சின் செயலாளருக்கு உண்டு. அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ வாகனங்களுக்கு மாதத்திற்கு 900 லீட்டர் வரையான எரிபொருள் ஒதுக்கப்படும்.
அவ்வாறான அரசாங்க வாகனங்களை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் தனிப்பட்ட செயலாளர், ஒருங்கிணைப்பு செயலாளர், ஊடகச் செயலாளர் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் மாத்திரம் பயன்படுத்த முடியும். அதேநேரம் தனிப்பட்ட செயலாளர், ஒருங்கிணைப்பு செயலாளர், ஊடகச் செயலாளர் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோரின் பதவிகள் தற்காலிக அடிப்படையில் இடம்பெற வேண்டும்.
அமைச்சர் அல்லது பிரதி அமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய உறவினர்கள் இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.



