இலங்கை தொடர்பான புதிய தீர்மானம்: ஐ.நாவிடம் பிரித்தானிய தமிழர் பேரவை விசனம்!

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற இனமோதலுக்கான அடிப்படைக்காரணத்தை அடையாளப்படுத்துவதற்குத் தவறியுள்ளது. குறிப்பாக அத்தீர்மானம் தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதற்கான சாத்தியப்பாட்டை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பிரித்தானிய தமிழர் பேரவை தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

அண்மையில் நடைபெற்றுமுடிந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 60/1 தீர்மானம் குறித்து தமது கரிசனையை வெளிப்படுத்தி பிரித்தானிய தமிழர் பேரவையின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் வி.ரவிகுமார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

இப்புதிய தீர்மானமானது தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதற்கான சாத்தியப்பாட்டை மேம்படுத்துவதற்குப் பதிலாக, தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை மேலும் தீவிரப்படுத்தக்கூடிய அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.

அத்தோடு ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானமானது இலங்கையில் இடம்பெற்ற இனமோதலுக்கான அடிப்படை காரணத்தை அடையாளப்படுத்துவதற்குத் தவறியிருப்பதுடன், தமிழர் தாயகத்தில் பல தசாப்த காலமாக அரசினால் கட்டவிழ்த்துவிடப்பட்டவரும் வன்முறைகளுடன் கூடிய இனவழிப்பின் கூறுகளை முழுமையாகப் புறக்கணித்திருப்பதாகவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று 1956 ஆம் ஆண்டு முதல் சர்வதேச சட்டத்துக்கு முரணான கட்டமைக்கப்பட்ட வன்முறைகள் இடம்பெற்றுவருவதைக் காண்பிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை வசம் 120,000 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ள போதிலும், இப்புதிய தீர்மானம் தமிழர்களின் நம்பிக்கையை சீர்குலைத்திருப்பதாக அதில் விசனம் வெளியிடப்பட்டிருப்பதுடன் நம்பகத்தன்மையும், சுயாதீனத்துவமும் அற்ற உள்ளகப்பொறிமுறைகளிலேயே ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து தங்கியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை ‘ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின்கீழ் இயங்கிவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திடம் சாட்சியம் அளிக்கும் பாதிக்கப்பட்ட தமிழர்கள், அதுகுறித்த இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையிலேயே அதனை வழங்குகின்றனர். அவ்வாறிருக்கையில் மேற்படி சாட்சியங்கள் இலங்கையின் அரச கட்டமைப்புக்களுக்கு அனுப்பப்படுமாயின், அது பாதிக்கப்பட்ட தரப்பினர் மீது ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதற்கு வழிவகுப்பதுடன் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையின்மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை சீர்குலைவடையச்செய்யும்’ என்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.