இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் சாதகமான முடிவு எட்டப்பட்ட பின்னரே புதிய கடன் வழங்கப்படும் – யுகிகோ ஒகானோ

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் தொடர்பில் ஜப்பானின் ஊடக மற்றும் ராஜதந்திர துறைக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் யுகிகோ ஒகானோ, இலங்கை ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

ஜப்பானின் பரிசீலனைக்காக இலங்கை அரசாங்கத்தினால் பல முதலீட்டு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், ஜப்பானின் தற்போதைய கவனம், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு முடிந்தவரை விரைவாகவும் சுமுகமாகவும் உதவுவதாக மட்டுமே இருக்கும் என யுகிகோ ஒகானோ கூறியுள்ளார்.

ஜப்பானிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்படவிருந்த, கைவிடப்பட்ட இலகு தொடருந்து போக்குவரத்து திட்டம் போன்ற குறிப்பிட்ட திட்டங்கள், ஜப்பானிய வெளியுறவு அமைச்சரின் பயணத்தின்போது விவாதிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் சாதகமான முடிவு எட்டப்பட்ட பின்னரே புதிய கடன் வழங்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பொறுப்பான கடனளிப்பவர் என்ற வகையில், ஏற்கனவே கடனில் உள்ள நாடுகளுக்கு கடன் வழங்கக்கூடாது, என ஜப்பானின் ஊடக மற்றும் ராஜதந்திர துறைக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் யுகிகோ ஒகானோ தெரிவித்துள்ளார்