ஜனநாயகம், தனி மனித உரிமையை பாதுகாக்கும் வகையில் புதிய பயங்கரவாத சட்டம் – நீதி அமைச்சர்அறிவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்து ஜனநாயகம், தனி மனித உரிமையை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் மீதான விமர்சனங்கள் புதிய சட்டத்தில் உள்வாங்கப்படாது. குறைப்பாடுகளை முன்வைப்பவர்கள் சிறந்த பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நீதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைபு குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சியில் ஆறுமாத காலத்தை வரையறுத்து பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது.இந்த சட்டம் தனிமனித சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டது.இந்த சட்டத்தால் நாங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டோம்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயகம் அம்சங்கள் மற்றும் மனித உரிமைகளை உள்ளடக்கிய வகையில் புதிய சட்டம் ஒன்றை இயற்றுவோம் என்று மக்களுக்கு வாக்குறுதியளித்தோம்.

இதற்கமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ச குலரத்ன தலைமையில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

கடந்த அரசாங்கம் தயாரித்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்கள், தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட  ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்து ஜனநாயகம், தனி மனித உரிமையை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் மீதான விமர்சனங்கள் புதிய சட்டத்தில் உள்வாங்கப்படாது. குறைப்பாடுகளை முன்வைப்பவர்கள் சிறந்த பரிந்துரைகளை முன்வைக்க வேண்டும்.

புதிய சட்டத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும். சகல விடயங்களுக்கும் குறைகளை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருந்தால் எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது என்றார்.