இலங்கைக்கு ரஷ்யா அழுத்தம் கொடுப்பதாக நெதர்லாந்து சாடல்

நெதர்லாந்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் நடைபெற்று வரும் ‘உலகப் பத்திரிகைப் புகைப்படக் கண்காட்சியில்’ இடம்பெற்றுள்ள யுக்ரைன் போர் தொடர்பான புகைப்படங்களை நீக்குமாறு கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம் அழுத்தம் கொடுப்பதாக நெதர்லாந்து தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.

இது இலங்கையர்களின் தகவல் அறியும் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் என்று நெதர்லாந்து தூதரகம் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 27ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமான இந்த கண்காட்சியை ரஷ்ய தூதுவர் கடந்த வார இறுதியில் பார்வையிட்டதுடன் யுக்ரைன் போர் தொடர்பான படங்களை நீக்கக் கோரியும், தவறினால் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அச்சுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், எதிர்வரும் 13ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ள கண்காட்சியிலிருந்தும் இந்தப் புகைப்படங்களை நீக்குமாறு ரஷ்ய தூதரகம் இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும், இந்த கோரிக்கைகளை நிராகரித்துள்ள நெதர்லாந்து தூதரகம், எவ்வித தணிக்கையுமின்றி கண்டியில் மார்ச் 13 முதல் 17 வரை இந்த கண்காட்சி தொடரும் என அறிவித்துள்ளது.
ஒரு நாட்டின் பிரஜைகள் எதைப் பார்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க மற்றுமொரு நாட்டுத் தூதரகம் முயற்சிப்பது அந்த நாட்டின் இறையாண்மையை மீறும் செயல் எனத் தெரிவித்துள்ள நெதர்லாந்து தூதரகம், ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.